பக்கம்:புது வெளிச்சம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேலே சொன்ன மூன்று ஆச்சாரிமார்களின் இருதயத்தில் கடுகளவு உண்மையோ மனிதாபிமானமோ இருந்திருந்தால், அகம் பிரம்மாஸ்மி நானே பிரம்மமாயுள்ளேன் என்றும்', 'சோ அகம் அஸ்மி' 'நீயும் பிரம்மமாயுள்ளனை என்றும் சொல்லி இருக்க வேண்டும். 'சவ ஏஷஆத்மா ஹருதி' - இந்த ஆத்மா இருதயத்திலுள்ளவன். 'ஏஷ ஆத்மேதி '- இதுதான் ஆத்மா, 'ஏத-தம்ருதம்' - இதுவே அழிவில்லாதது. 'அபயம் '- பயமில்லாதது, 'ஏதத் பிரம்மேதி' - இதுவே பிரம்மா, எதஸ்ய ப்ராமனோ நாம சத்யமிதி - இந்தப் பிரம்மத்தின் பெயர் சத்தியம் என்று சொல்லியிருந்தால், - மக்களுக்குப் போதித்திருந்தால் இந்த அத்வைத துவைத விசிஸ்டாத்துவைத ஆச்சாரிகள் மூவரையும் ஆத்மநேய குருமார்களாக இதயத்தில் வைத்துப் போற்றக் கடமைப்பட்டது. இந்தப் பாரத சமுதாயம் என்று கொள்வது மிகச் சரியானது. ஆனால் இவர்கள் வாயில் இந்த உண்மைகள் வரவே இல்லை. சடப்பொருள்களைக் காட்டிச் சிவன், விஷ்ணு எனப் பெயர்கள் வைத்து உருவங்களைச் செய்து கோவில்களைக் கட்டிக் கும்பிடச்செய்தார்கள். எனவே பாரத சமுதாயம் கடவுளை அறியாமல், கடவுளே கடவுளே என்று வெறும் கூச்சல் போட்டுக் கொண்டுள்ளது என்று இன்று என்னைக் கூற வைக்கிறது.

இம்மூவரில் முன்னுரிமைபெற்றவர் காலாடி ஆதி சங்கராச்சாரியார்தான். இவர்தான் அத்வைத போதகர். 'அத்வைதம் ' எனில் இரண்டற்றது; பிரம்மம் வேறு நான் வேறு அல்ல; நானே அந்தப் பிரம்மமாயுள்ளேன் என்பதே அதன் பொருள். இது மிகவும் சரியானது. உபநிசத்துகளும் இதைத்தான் உரைக்கிறது. ஆனால், இப்படிச் சரியாகச் சொன்னது தம்மவர்களுக்கு மட்டும்தான். நம்மவர்களுக்கு இதேபோதனை மறைக்கப்பட்டு விட்டது. என்பதுதான் உண்மை.

இது, நம்முடைய சோற்றைத் தின்றுவிட்டு நமக்குச் செய்த பச்சைத் துரோகம் என்றால் அது மிகையாகாது. எப்படியெனில், 'சத்து, சித்து, ஆனந்தம் - சிவம்’ என்கிறது ஒரு உபநிசத்து. மற்றொரு உபநிசத்து மேலும் சற்று விளக்கமாக - சத்தியம், ஞானம், அனந்தம் - பிரம்மம் என்கிறது.

78

கவிஞர் வெள்ளியங்காட்டான்