பக்கம்:புது வெளிச்சம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவிர வேறு என்ன நல்லபயன் விளைந்துவிடப் போகிறது? என் அருமை நண்பனே சிந்தித்துப்பார்?

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரால் தமிழர்களாகிய நமக்கு அன்பளிப்பாகக் கற்பித்துக் கொடுத்த - சிவன் எனும் பெயர்ச்சொல் முழுமுதற்கடவுளாக்கிப் பாடிப்பாவிய நூல்கள், வகையும் தொகையும் இன்றிப்பெருகி மலிந்து கிடக்கின்றன. இவற்றை விரிக்கிற்பெருகும்.

அன்றிலிருந்து இன்றுவரை மட்டும் என்ன வந்தது. இனிமேலும் கூட நாமனைவரும் பராதீனர்களாகத்தான் வாழ்ந்தும் வாழ்ந்து கொண்டும், வாழவும் உள்ளோம். நமக்குக் காலம் கழியும் பொருத்தமான பாடல்கள் ஆயிரமாயிரம் உள்ளன. மாதிரிக்கு என் செயலாவதியதி தொன்றுமில்லையினித் தெய்வமே! உன் செயலேயென்றுணரப் பெற்றேன் எனும் வகையில் அனைத்தும் இருக்கும். 'எல்லாம் அவன் செயல்', நம்மால் எதுவும் செய்ய இயலாது என்னும் முடிவு, முடிந்த முடிவு. இதற்கு மாற்றே கிடையாது.

மாபெரும் பாரத தேசத்தை அராபியன் ஆண்டால் என்ன ஆப்கானியன் ஆண்டால் என்ன, துருக்கன் ஆண்டால் என்ன, இங்கிலீஸ்காரன், பிரன்சுக்காரன், டச்சுக்காரன். போர்த்துக்கீசியன் யாரோ வந்து பல நூற்றாண்டாண்டாலும் என்ன? நாம் வாழ ஊர் இருக்கிறது; உழைக்க நிலமிருக்கிறது. உண்ணச் சோறிருக்கிறது. இம்மைக்கு இது போதாதா? மறுமைக்குச் சிவன் இருக்கவே இருக்கிறான். 'காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா' - இது போதாதா மனதைத் தேற்றிக் கொள்ள!

சிவன் கதை இது என்றால் விஷ்ணு கதை இன்னும் ஒருபடி மேலே இருக்கும். அது அவதாரமயம். "நமக்கினி பயமேது, நம் ராமனருளிருக்கும் போது” என்பது தாரக மந்திரம். ராமா என்றாலே பாவம் போம் என்பது அவர்கள் நம்பிக்கை.

'பராதீனன்' என்றால் அடிமை என்பது பொருள். நம்மை நிரந்தர அடிமையாக்கினவர்கள் இந்தச் சங்கராச்சாரி, இராமானுஜாச்சாரி, மாத்துவாச்சாரிகள். இனி இதிலிருந்து விடுதலை இல்லை.

80

கவிஞர் வெள்ளியங்காட்டான்