பக்கம்:புதையலும் பேழையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருந்தில் மலர்ந்த இலக்கியம்.

புகழின் கண்

கொங்கு நாட்டில் ஈர்ந்துார் என்றோர் ஊர் உண்டு, இஃது ஈரோட்டுக்கு அண்மையில் அமைந்துள்ள ஊர். இந்நாளில் ஈஞ்சூர்' என்று வழங்கப்படுகின்றது. சங்க காலத்தில் அவ்வூர்த் தலைவன் ஒருவன் சிறந்து விளங்கினான். அவன் பெயர் தோயன்மாறன், அவனுக்கு அரியணை இல்லை. ஆனால், மக்களது மன அணை உண்டு. பெருஞ்செல்வனும் அல்லன். ஆயினும், இல்லை என்று வந்தோரை 'இல்லை’ என்று விடுக் காதவன். கட்டான உடலுரமும், முட்டாத நெஞ்சுரமும் கொண்டவன்.

தன் மன்னனுக்குப் பகைவரால் இடையூறு நேர்ந்தால் அவ்விடையூற்றைத் தன் இடையூறாக ஏற்று விரைந்து சென்று மன்னனது துன்பத்தினைத்தீர்த்து வந்தான். தன் மன்னனுக்குத் துணையாக நாடு காவலுக்குச் செல்வான். நேரும் போர்களில் முன்னணித் தலைவனாக நின்று வெற்றி தேடித்தருவான். அவன் பங்கு பெறாத போர் இல்லை. அவன் உடலில் வேல் குத்தாத இடம் இல்லை. வாள் வெட்டாத உறுப்பில்லை. அம்பு பாயாத பகுதி இல்லை. இவையெல்லாம் அவன் முதுகைப் பதம் பார்த்தன அல்ல. இவ்வகையில் அவனது உடம்பினைச் சுவை காணாத இரும்பு இல்லை. போர்க்காயங்களால் வடுப் பெறாத தோல்பகுதி யும் அவன் உடம்பில் இல்லை. -