பக்கம்:புதையலும் பேழையும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 புதையலும்

இவர் மொழித்துறையில் ஊக்கங்கொண்டவர் அல்லர்; இறை அருளில் தோய்ந்தவர். அருளையும் பட்டறிவையும் குழைத்து ஆயிரக் கணக்கில் பனுவல் தீட்டியவர். தம் பாடல்களில் அருள்' என்னும் சொல் 3738 இடங்களில் இயல்பாக அமையப் பாடியவர். அதன் இயைபாகத் தம் பாடல்களுக்கு அருட்பா எனப்பெயர் சூட்டியவர். ஆம்; வள்ளலார் இராமலிங்க அடிகளாரது உள்ளம் வழங்கிய கருத்து இது. இதனை உணர்ச்சியின் சொற்றொடர் உருவம் எனலாம்.

மேலே காணப்பட்ட கருத்துரை வள்ளலார் இராமலிங்க அடிகளாரது உணர்ச்சி வடிவம் என்ற உணர்வில் மீண்டும் ஒரு கால் படித்து மேலே செல்லலாம்.

வள்ளல் இராமலிங்க அடிகளார் இறைவன் அருளைப்

பெறுவதற்குத் துணையாகக் கொண்டது. இனிமைத் தமிழ்

மொழியையே. அவர்க்கு முன்னே திகழ்ந்த சமயச் சான்றோர் களும் தமிழ் கொண்டே இறைவனை அணுகினர்.

மொழிகளும் இறைவனும்.

மொழிகள் யாவும் இறைவனால் ஒலிக்கப்பட்டவை என்பது சமயத் துறையினரது ஒருவகைக் கருத்து. அவை சான்றோரால் வழங்கப்படுங்கால், இறைவனது அறத்தைச் சொல்லவே பயன்படுத் தப்பட்டன என்பதும் சமயத்துறைக் கருத்தேயாகும். இதனைச் சைவப் பெருநூலாம் திருமந்திரத்தை வழங்கிய திருமூலர்,

'பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே'

-என்று ஆகமச் சிறப்பை விளக்கும் பகுதியில் பாடினார். இப்பதினெட்டு மொழி களுள்ளும் தேர்ந்த மொழிகள் தமிழும் ஆரியமும். இவ்விரண்டும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்பர் சமயத்துறையினர். இறைவன் 'தமருகம்' என்னும் தனது தோற்கருவியின் ஒரு புறத்தில் ஒலியெழுப்பித் தமிழையும், மறுபுறத்தில் ஒலியெழுப்பி ஆரியத்தையும் வெளிப்படுத்தினன் என்பர். இவ்விரண்டு மொழி

1 திருமந் : ஆகமச் சிறப்பு : 3,