முன்னுரை
உலகில் தோன்றிய ஆறு தீர்க்கதரிசிகளும் ஆசியா கண்டத்திலேயே அவதரித்தார்கள். சுமார் 3.000 - ஆண்டுகட்கு முன் ஜார துஷ்டடிரர் பாரசீக நாட்டில் தோன்றினார். லாவோத்ஸே. கன்பூஷஸ் இருவரும் சுமார் 2,500 ஆண்டுகட்கு முன் சீன தேசத்தில் வாழ்திருந்தனர். அதே காலத்தில் பாரத நாட்டில் வாழ்ந்திருந்த பெரியார் கௌதம புத்தர். புத்தருக்குப் பின்னால், இற்றைக்கு 1955 ஆண்டுகட்கு முன் பாலஸ்தீனத்தில் ஏசு கிறிஸ்து தோன்றினார். அவருக்குப்பின் கி. பி. 632 - ல் அரேபியாவில் நபிகள் நாயகம் அவதரித்தார்.
புத்தர் பெருமான் அவதரித்த ஆண்டு துல்லியமாக இன்னும் தீர்மானிக்கப் பெறவில்லை. பெரும்பாலான ஆசிரியர்கள் கி. மு. 563 என்று குறிப்பிட்டிருந்தபோதிலும், கி. மு. 573 தான் சரியான ஆண்டு என்பதற்கு அவர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளே ஆதாரமாயுள்ளன. புத்தர் தமது 29 - வது வயதில் அரண்மனையை விட்டு வெளியேறித் துறவு பூண்டார். ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்தபின், 35 - வது வயதில் அவர் பூரண ஞானமடைந்தார். அதன்பின் 45 ஆண்டுகள் வட இந்தியாவில் பல தலங்களுக்கும் நடந்து சென்று, அவர் தருமப்பிரச்சாரம் செய்துவந்து. இறுதியில் குசீநகரில் மகா - பரி - நிருவாணமடைந்தார். அவருடைய பிறப்பு, துறவு. மெய்ஞ்ஞானம், மகா - பரி - நிருவாணம் ஆகிய நான்கில் ஒவ்வொன்றும் வைகாசிமீ பூர்ணிமையன்றே ஏற்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த நான்கு நிகழ்ச்சிகளுக்கும் பொருத்தமாயுள்ள ஆண்டு கி. மு. 573 ஒன்றுதான். புத்தருடைய காலம் கி.மு. 573 - 493 என்பதை அறிஞர்களும், ஆசிரியர்களும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியிருக்கின்றது. இதன்படி புத்தர் அவதரித்து இப்போது 2,529 ஆண்டுகளாகின்றன.