பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்டிடும் அறியா மையாம்
மாவிருள் மூழ்கி யோன்பின்
கண்டரும்[1] அறிவுச் செல்வம்
கணக்கிலா தடைவா னாயின்
கொண்டலின் விலகித் தோன்றும்
குளிர்நில வினைப்போல் அன்னான்
மண்டிணி ஞால மீது
மகிழ்வொடு மிளிரு வானே.

41


கண்ணியில் அகப்பட் டோங்கிக்
கலுழ்ந்திடும்[2] பறவை கள்போல்
புண்ணுறும் அவாவில் வீழ்ந்து
புலம்புவோர் பலரா யுள்ளார்.
கண்ணியின் விடுபட் டோடிக்
களித்திடும் மானைப் போல,
மண்ணினில் அவாவின் நீங்கும்
மாண்பினர் சிலரே உள்ளார்.

42


ஒண்கடல் சூழும் இந்த
உலகெலாம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றி ஆளும்
வேந்துறு பதவி தானும்
விண்கடந் திருப்ப தாக
விளம்பிடும் வீடு பேறும்,
மண்டனில்[3]அவாவ றுத்தோர்
மகிழ்ச்சியின் மேலா காவாம்.

43

15

  1. 46
  2. 47
  3. 48