பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


அன்பினை ஒருவர் மீதே
அறவிறந் தாற்றக் கொள்ளின்,
வன்புறு[1] முறையில் ஓர
வஞ்சனைக் கிடமுண் டாகும்;
அன்பினால் அவர்குற் றத்தை
அறிந்திடும் வாய்ப்பும் போகும்;
அன்பினைக் கொள்ளு தற்கும்
அளவது பொதுவாய் வேண்டும்

53


புனல்வழி ஓடு கின்ற
புணை[2]யினைப் போலப் பற்றை
மனவழிப் பற்றிச் செல்லல்
மடமையாம்; அடக்கம் என்னும்
அணைவழிந் தோடு கின்ற
ஐம்புல அவாவெள் ளத்தில்
முனைவுடன் எதிர்த்து நீந்தி
முன்னுறச் செல்லல் வேண்டும்.

54


நீண்டநாள் கடந்த பின்னர்
நேடுந்தொலை இடத்தி னின்று
மீண்டுவந் தோரை யாரும்
மிகுமகிழ் வுடனே ஏற்பர்;
ஈண்டிடும் பொருள்மீ தெல்லாம்
இணைந்திடும் பற்று நீங்கி
வேண்டிடும் பொருளில் மட்டும்
விருப்பினை அளவாய்க் கொள்க

55

19

  1. 56
  2. 57