பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடுக்குறு[1] வேரை வெட்டின்
முளைத்திடா மரங்கள் மீண்டும் ;
அடக்கரும் அவாவ றுத்தோர்
அயர்ந்திடத் துன்பம் பற்றித்
தடுக்குதல் என்றும் இல்லை ;
தாமரை இலையில் தண்ணீர்
வெடுக்கென விலகு தல்போல்
விலகிடும் துன்பம் யாவும்.

86


உற்றிடும் அவாவோ நீண்ட
ஒடைபோல் ஓயா தோடும் ;
பற்றெனும்[2] கொடியோ ஆண்டு
படர்ந்திடும் வளமாய் நீள ;
கற்றுறும் அறிவு கொண்டு
களைந்திடல் வேண்டும் முற்றும்.
வெற்றிநீ கொள்ளா யாயின்
விடாப்பிடி யாகும் துன்பம்.

87


வேட்டையில் முயல்கள் தோன்றின்
விரைந்திடும் அங்கும் இங்கும் ;
வேட்டையில்[3] சிக்கு மாந்தர்
திரிகிறார் இங்கும் அங்கும்.
சாட்டிடும் தீய பற்றாம்
சங்கிலி பிணைக்கப் பெற்றோர்
மீட்டிடாச் சிறைத்துன் பத்தில்
மேவுவார் நிலையாய் மன்னி.

88

30

  1. 85
  2. 86
  3. 87