பக்கம்:புத்தர் பொன்மொழி நூறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாமரை இலையில் ஒட்டாத்
தண்ணிய[1] நீரே போல,
தாமமார் ஊசிக் கூரில்
தங்கிடாக் கடுகு மான,
காமமும் சினமும் பற்றும்
கழிந்திடச் செயவல் லோரே
ஆமென ஏற்கும் வண்ணம்
அரும்பிரா மணரே யாவர்.

98


உயிர்களைத் துன்பு றுத்தல்,
உறுபெருங் கொலையும் செய்தல்,
துயருறக் கொலைகள் செய்யத்
தூண்டுதல், வேள்வித் தீயில்
உயிருடல் வெட்டிப் போட்டே
உயர்மறைக் கூற்றின்[2] பேரால்
உயர்வற உண்ணல், செய்வோர்
உயர்பிரா மணரே யாகார்.

99


ஆர்க்குமே பகையால் தீமை
ஆர்ந்திடச் செய்யாப் பண்பர்.
போர்க்கெழும் முரடர் நாப்பண்[3]
பொறுமையோ டிருந்து வாழ்வோர்.
ஈர்க்குமெப் பற்றும் உள்ளோ
ரிடையிலே பற்றற் றுள்ளோர்.
ஓர்க்கரு நோன்பு கொள்வோர்,
உயர்பிரா மணரே யன்றோ!

100



34

  1. 97
  2. 98
  3. 99