பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடங்கியிருக்கும். சச்சிதானந்தப் பரம்பொருள் உலகோடும், உயிரோடும் நீக்கமறக் கலந்து நிற்கிறது. இப்பரம்பொருள் மும்மூர்த்திகளில் ஒன்றன்று; அவற்றிற்கும் மேற்பட்ட முழு முதல். எனவே இச்சித்தாந்தத்தில் மெய்ப்பொருள் ஒன்றே என்ற கொள்கையும், நித்தியமான மூன்று பொருள்கள் உண்டென்ற கொள்கையும் முரண்பாடில்லாத முறையில் நிலைத்திருக்கின்றன. இச்சித்தாந்தத்தைச் சுத்த அத்வைதமென்றும் கூறுவர். சித்தாந்த சைவத்தில் சமய வழிபாட்டுக்கு நான்கு வழிகள் வகுக்கப் பெற்றிருக்கின்றன. சரியை (உருவ வழிபாடு), கிரியை (அருவுருவ வழிபாடு) யோகம் (அருவ வழிபாடு), ஞானம் (உயர்நிலை) ஆலயங்களில் இறைவனை வணங்குவதுபோல், உயிர்களை வணங்குவதும் விதிக்கப் பெற்றிருக்கிறது. 'இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் என்ற கொள்கையால், சைவர்கள் ஜீவகாருணிய நெறியைப் பெரிதும் போற்றுவர். சைவமும் தமிழும் தழைக்கும்படி வளர்த்த சமய குரவர்கள். நாயன்மார்களுடைய வரலாறுகளும் கதைகளும் ஏராளமாயிருக்கின்றன. பிற வாதங்கள் மேலே கூறிய வரலாற்றில் இந்திய நாட்டில் சமயங்களின் வளர்ச்சியும், தத்துவ ஆராய்ச்சியும் சுருங்கிய அளவில் குறிக்கப் பெற்றிருக்கின்றன. இவைகளைக் கொண்டு இந்திய மக்கள் அனைவருமே இரவும் பகலும் தொழுதும், தியானத்தில் ஆழ்ந்தும் இருந்தனர் என்று கருதவேண்டியதில்லை. சமயங்களின் நடுவே பூதவாதமும் (materialism) நிலைத்து வந்திருக்கிறது. சில சமயங்களில் அது மேலோங்கியும், சில காலங்களில் மங்கியும் வந்திருக்கிறது. இக்கொள்கை பற்றிய சரித்திர ஆராய்ச்சியின் மூலமே இதன் வரலாறு விளக்கமாகத் தெரியும். ஈசனே இல்லையென்று நாத்திகவாதமும், 'உண்டு, இல்லை யென்று உறுதிப்படுத்தாத சந்தேக வாதமும் (agnosticism) வெவ்வேறு காலங்களில் இருந்திருக்கின்றன. ஆனால் சமயங்களைப் பற்றிய சரித்திரங்களைப் போல், இவைகளைப்பற்றிய வரலாறுகள் இன்னும் விரிவாக எழுதப்படவில்லை.

  • r

50 ைபுத்த ஞாயிறு