பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைகளும் முழங்கவும், மக்கள் பெருங்கூட்டமாகத் தொடர்ந்து வரவும், மன்னற்குரிய மரியாதைகளுடன், இந்த இளவரசன் தன் விலையுயர்ந்த ஆடைகளைக் களைந்துவிட்டு, நீரில் மூழ்கி, வெள்ளைத் துணி அணிந்துகொண்டு, பள்ளியிலுள்ள பிக்குவிடம் வருவான். தான் நிர்வான சாந்தி அடைவதற்காகத் தன்பால் அருள் சுரந்து துறவிகளின் மஞ்சளாடையைத் தனக்கு அளிக்கும்படி வேண்டுவான். அவ்வாறே பெற்றுக்கொண்டு, தலையை முண்டனம் செய்து, சீவர உடையணிந்து, மீண்டும் வந்து பிக்குவிடம் உபதேசம் பெறுவான். ஆறு மாதமோ, ஒரு வருடமோ, பிக்குகள் சங்கத்தில் வாழ்ந்து, அவர்களுடைய ஒழுக்கங்களைப் பின்பற்றி, அவர்களுக்குத் தொண்டு செய்து வருவான். பின்னால்தான் அவன் தன் குடும்பத்திற்குத் திரும்புவான். இளைஞன் வெள்ளைக் குதிரை மீது பவனிவருதல். 25 நூற்றாண்டுகட்கு முன்பு இளவரசர் சித்தார்த்தர் கபிலவாஸ்துவில் தம் அரண்மனையையும் அரச போகத்தையும் துறந்து நள்ளிரவில் 'கண்டகம்' என்ற தமது வெள்ளைக் குதிரையிலேறிச் சென்றதை நினைவுறுத்தும். பள்ளியுட் சென்றதும் நீரிலே குளித்தல், சித்தார்த்தர் அநோம நதியை யடைந்து நீராடியதைப் போன்றது. அநோம நதிக்கரையில் சித்தார்த்தர் பொன்னாடைகளை நீத்து, உடைவாளால் தமது மயிர்முடியை அறுத்தெறிந்ததைப் போலவே பர்மியச் சிறுவன் தலையை முண்டனம் செய்துகொள்கிறான். இத்தகைய அரிய சடங்குக்காகப் பர்மியர் பெரும் பொருளைச் செலவிடுதல் வழக்கம். ஏழைகள்கூடப் பல வருடங்களாக இதற்கென்று பணம் சேமித்து வைப்பது வழக்கமாம்! புனித பூமி நேபாளத்தருகிலுள்ள கபில வாஸ்து நகர், வெண்மையான கண்டகக்குதிரை, குதிரைக்காரனாகிய சந்தகன், அநோம நதிக்கரையின் மணல், இளவரசராகிய சித்தார்த்தர் துறவு பூண்டு காவியுடையணிதல், இவைகளை உலகம் ஒருநாளும் மறக்க முடியாது. அம்மட்டோ பின்னால் சித்தார்த்தர் வாழ்க்கையிலே அவரோடு தொடர்புகொண்ட மக்களையும், இடங்களையும்கூட மறக்க முடியாது. கபிலவாஸ்து அவர் பிறந்த இடம். உருவேலா அவர் தவஞ்செய்த வனம். புத்தகயை அவர் ஞானமடைந்த தலம்; அங்குள்ள போதி (அரச) மரத்தடியில் அவர் ஞானமடைந்து புத்தரானார். அதுமுதல் புத்தருக்குரிய பெருமை அந்த மரத்திற்கும் ஏற்பட்டுவிட்டது. ஞானமடைந்த பின்பு, தாம் பெற்ற இன்பத்தை மற்றெல்லோருக்கும் அளிப்பதற்காகப் புத்தர் அற ஆழியை உருட்ட ஆரம்பித்து, முதன்முதல் உபதேசம் செய்த இடம் காசிக்கருகிலுள்ள சாரநாத். பின்னால் அவர்தங்கியிருந்த வேணுவனம், ஜேதவனம் போன்ற 6 புத்த ஞாயிறு