பக்கம்:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதுபோல் ஒருவரும் காணாத மெய்ப்பொருளைப் பற்றி வீண் விசாரணைகள் செய்ய அவர் விரும்பவில்லை. கண் முன்புள்ள வாழ்க்கையை கவனித்தலே அவருக்கு முதல் வேலையாகத் தோன்றிற்று. அவரே உபதேசித்த அருமையான தத்துவங்களைப் பற்றிக் கூறுகையிலும், அவர் நதியைக் கடத்தற்கு உதவியான ஒடமென்றும் கடந்து அக்கரை சேர்ந்த பின்பும் ஒடத்தைத் தலையிலே துக்கி வைத்துக் கொண்டு செல்வது பரிகாசத்திற்கு இடமாகுமென்றும் கூறிவந்தார். புத்தர் மனிதனைப் பாவியாகவோ, தெய்வமாகவோ கருதாமல், மனிதனாகவே கருதி ஆராய்ந்து பார்த்தார். இது எளிதென்று தோன்றும். ஆயினும் மற்றும் பல மேதாவிகள் இவ்வாறு பார்ப்பதில்லை. அவர்களுடைய ஆராய்ச்சிகளில், பிரத்தியட்ச உண்மைகள் மறைந்து வெறுந் தத்துவக் குவியல்களே மிஞ்சுவது வழக்கம். மனிதன் உண்மையை உணரமுடியாமல் தடுப்பது எது என்பதை அறிந்து, அவன் கண்ணை மறைக்கும் அந்த அஞ்ஞானத் திரையை அகற்றுவதையே தமது முறையாகக் கொண்டிருந்தார் புத்தர். பேதைமை அகன்றதும், மனிதனின் மனக்கோணல்கள் நிமிர்ந்து நேராகிவிடும்; உண்மை அவனுக்கு விளங்கிவிடும். தேரி காதை" என்ற நூலில் ஒரு ஸ்திரீயைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுடைய கணவன் ஒரு கூனன். அவள் அரிசி குற்றிக் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு தானும் உண்டு கணவனையும் பராமரித்து வந்தாள். பின்னால் போதிவேந்தரின் பெளத்த தருமத்தை அவள் மேற்கொணடதும், உரல், உலக்கை, என் கூனற் கணவன் ஆகிய மூன்று கோணல்களும் என்னை விட்டு ஒழிந்தன என்று ஆனந்தத்தோடு கூறினாள். இவளைப் போலவே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் மனக்கோணல்களாகிய வாழ்வின் கோணல்களை நிமிர்த்துவதற்காகவே புத்தரை எதிர்பார்த்துக்கூடி வந்தார்கள். உலகில் மெஞ்ஞானம் பெற்று மக்கள் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கு அறிஞர்கள் காட்டி வந்த வழிகள் மூன்று வகையானவை. இவைகளை, மேற்பாதை, நடுப்பாதை, அடிப்பாதை' என்ற மூன்று பாதைகளாக ஆல்டஸ் ஹக்ஸ்லி குறிப்பிடுகிறார். இவைகளில் மேற்பாதையிலே செல்வோர் தத்துவ ஆராய்ச்சியின் மூலம் உண்மையை நாடுவர். ஆழ்ந்த சிந்தனையாலும், தியானத்தாலும் காணும் விஷயங்களிலிருந்து, இவர் தம் யூகத்தினால், எவை எப்படியிருக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து கூறுவர். † தேரிகாரை - பெளத்த பிக்குணிகளின் பாடல்கள் அடங்கிய நூல்: பிக்குகள் பாடிய பாடல்களின் தொகுதி தேரகாதை எனப்படும். இவையிரண்டும் பெளத்தத் திருமுறைகளைச் சேர்ந்தவை. தேரர்: மூத்தவரான பிக்கு தேரி - மூத்தவரான பிக்குணி. ப. ராமஸ்வாமி e 69