பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105



பசித்திடும் வயிறு கொள்ளப்
பருப்புநெய் கலந்து சோற்றைப்
புசித்திடச் செய்தல் போகப்
புலனெறிப் புலவர் சாக,
வசித்திடும் ஊர்கள் தோறும்
வறுமையை வளர்த்து , வாய்மை
நசித்திடச் செயும்பொய்த் தெய்வம்
நமைநாச மாக்கிற் றன்றே!

ஊன்மிக வுடலை யோம்பி
உருவொன்றி னெதிரியில் நின்று,
தேன் மிகு குரலில் தெள்ளத்
தேவதைப் பாடல் செப்பி,
'வான் மிக அருள்வை குந்த
வாசனே!' எனவ ணங்கல்
'ஆன்மிக' மென்பா ரெல்லாம்
அகம்பிர்ம மாவ தோரார்!

தெள்ளவே தெளிந்த தேனாம்
திருக்குறள் கற்றுத் தேயா
துள்ளத்தி லுண்மை யொன்ற
வுலகோம்பும் செயல்கள் செய்து
கள்ளத்த னம், பொய் சூது
கல்லியே வழித்து வீசி
ஒள்ளிய ராயெல் லாரும்
உவப்பதான் மிகமா கும்மே!

நையக மாகி நாட்டில்
நல்லோர்கள் நலிதல் நாடார்,
'பையகம் நிறையக் காசு
பணம்சேர்ப்ப தேபாங்’ கென்னும்
வையகப் போக்கை மாற்றி,
வாழ்வாங்கு வாழ வே,நும்
கையகம் மெய்நூ லேந்திக்
கற்பதே கடமை" யென்றேன்.