பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114




"ஆரணங் கானோர் வாழ்வில்
அறிவறிந் தடங்கா ராய்ச்சொற்
போரணங் குகளாய்ப் போயின்,
புவியெலாம் புன்மை யெய்தத்
தோரணந் துாக்கிக் கட்டித்
துயரினை வரவேற் குந்துர்க்
காரண மாவா' ரென்பர்
கவிஞர்க" ளென்றான் , நண்பன்.

"பாட்டியாய்த் தாயாய், வாழ்வில்
பங்கேற்கும் மனைவி யாய்ப்பா
லுாட்டியே வளர்க்க வுள்ள
உரிமைசால் மகளா யூஞ்சல்
ஆட்டியே துயிலச் செய்யும்
அரும்பெறல் பேத்தி யாய்த்தம்
வீட்டையே விளக்கும் பெண்தான்
விடிவெள்ளி" யென்றாள், தேவி!

அகத்தினி லாரா அன்போ
ரலைகட லெனுமா றார்க்க
முகத்தினில் முல்லை மொக்காய்
மோகன முறுவல் மூசச்
சகத்தினி லறிவ றிந்த
சதிபதி யசதி யாட்டிவ்
வுகத்தினி லிதற்கொப் பென்ன
வுரைக்கவே றொன்றி ராதே!

ஊராரங் கொருவ ரில்லா
துற்றஎன் னொருவன் முன்னக்
காராருங் கூந்தல் கன்னி,
கருத்தாருங் காளை யோடும்
சீராரும் சிந்தை யொன்றிச்
சிரிப்பது கண்டு நானும்,
"பாரோரும் பார்க்கத் தக்க
பதி,சதிப் பாங்கிஃ" தென்றேன்,