பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

'ஒளிவிட்ட மின்,மின் காந்த
வொளி,வளி யணுவென் றோயா
தளவிட்டுக் கூறற் காகா
வளவின தாகி, வான
வெளிவிட்டு வேறு யொன்றாய்
விரைந்தவா றியங்கு' மென்ப
திளவட்ட மானோர் கூட
இன்றிதை யறிவார் கற்றே!

இணக்கமும் பிணக்கு மாகி
யிருக்கும் நீர், நெருப்பும், காற்றும்
கணக்கிலாச் சீவ ராசி
காரண மாதல் கண்டார்.
பணிக்கரா யிருந்து முண்மை
பகராமற் பதுங்கி யுண்ண,
வணக்கினார், நம்மைச் சைவ
வைணவ ராக்கி வைத்தே!

நீருக்கும் நெருப்பி னுக்கும்
நேர்த்தியாய்க் கோவில் கட்டி
ஊருக்குள் ளிரண்டு பண்ணி
உயிருக்கோர் விலையில் லாதும்,
பாருக்கு மாசுண் டாகப்
பாவபுண் ணியம்பா ராதும்,
போருக்கு வித்திட் டார்கள்
பொய்யர்கள் புராணப் பொய்யால்!

தன்னலர், தமைப்பின் பற்றும்
தனிகர்கள், தரணி யாளும்
மன்னரோ டொன்றி, மற்ற
மனிதரை மடக்கிக் கூடித்
தின்னுதற் கமையச் செய்த
தெய்வம், தேர், திருவி ழாவென்
றின்னமும் நமைவி டாராய்
ஏமாற்று கின்றா ரிங்கே!