பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

இன்றைய சாவுச் செய்திகள் கற்பழிப்புச் செய்திகள் தாலிச் சரடுகள் தங்கச் சங்கிலி பிக்பாக்கெட் திருட்டுச் செய்திகளை யேந்திக் கொண்டுவரும்நாளிதழ் ஏடுகள்.

1980 செப்டம்பர் திங்கள் 'கஸ்துாரி' என்ற கன்னட மொழிப் பத்திரிக்கையில் நான் படித்துத் தெரிந்து கொண்ட செய்தி இது:

பாரத யுத்தம் முடிந்து வந்த கிருஷ்ணன் காந்தாரியைச் சந்திக்கிறான். காந்தாரி பேசுகிறாள்:

'கிருஷ்ணா! நான் எத்தகைய பேரழகியாயிருந்தேன் தெரியுமா? எங்கள் காந்தார நாட்டுமலைப்புறத்துச் சாரல்களில் துளியும் குறை கூற இயலாத படிகம் போன்ற நீர் நிலைகளின் அருகில் நின்று கொண்டு என்னை நானே பார்த்துப் பிரமித்து விடுவேன். தோழிகள் என்னுடைய அழகில் மயங்கி என் எதிர் காலக் கனவுக் கதைகளைப் பின்னிக் காட்டுவார்கள். அந்தோ! அங்கேயே முற்றிமுடிந்து போயிற்று என் பேரழகு! அதற்குப் பிறகு நான் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை. என்னைப் பார்த்துப் பரவசப்படும் பர்த்தாவும் வாய்க்கவில்லை. இது விதி வசமன்று; வீட்டுமனின் படைப்பலம், யுத்தம் வந்தால் மக்கள் விணாக மடிய நேரிடுமே என்ற இரக்கம் மிகுதியால் என்தந்தை தன் மகளாகிய என்னைக் இக்குருடனுக்குத் தாரை வார்த்துத் தர வேண்டி நேரிட்டது.

பிறகு என்ன வேண்டியிருந்தது. அன்றே நானும் கண்ணிைருந்தும் குருடியாய் அத்தினபுரியின் அரசியானேன். 'சீக்கிரம் கருப்பவதியாகிக் குழந்தைகளைப் பெற்றுக் கொடு’ என்று அடிக்கடி வீட்டுமனின் கெடுபிடி கூச்சல் காதில் விழுந்து கசந்து கொண்டே இருந்தது.

நானே கண்ணிருந்தும் குருடியானவள். தாலி தரித்தவனை அரசனே பிறவிக் குருடன். இந்த நிலையில் நான் கருத்தரிப்பது எவ்வாறு? அரண்மனை சிரித்தது; அந்தப்புரம் பரிதவித்தது.