பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

ஐயகோ! என் அருமைத் தமிழகமே! இவ்விரண்டு இதிகாசங்களையும் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து உளம் நிறைந்து வழியப் பருகினும் எந்த வித ஊட்டச் சத்தும் அதில் கிடையாதே! வெறும் இனிப்பு ரசம் இது. பருகினவனுடைய ஆத்மா படு நாசமடையச் செய்வது தவிர வேறு பயன் இம்மி அளவும் காண இயலாதே! நம்மை இவைகள் அடிமைகளாக்கி ஆளவுள்ள தன்றி ஆற்றல் சால் மக்களாக மாற்ற வல்லதல்ல வே! இலக்கியம் என்னும் சொல்லுக்குரிய பொருள் அணுவளவும் இல்லாத இவைகள் இலக்கியமாவதெவ்வாறு?

'இலக்கியம்' எனின் இம்மாதிரியான வெற்றுப் பொய்க் கடவுள்கதைகளன்று. மனிதப் பண்புகளைப் பாத்திரங்களில் பெய்து பல்வேறு நிகழ்ச்சிகளாக்கி இயக்கிக் காட்டி மக்கள் புலன் கொளச் செய்து ஆன்மிக நெறி கூட்டும் நூல்கள், பற்றுக் கோடாக அமையும் நூல்கள் தாம் இலக்கியம்.

தேற்றத்திற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள் : நட்டார்மனின் நிலவளம், ஆஸ்கார் ஒயில்டின் சிறிய குயிலும் சிவப்பு ரோஜாவும், விக்டர் யுகோவின் வீரனின் தியாகம், வி. ச. காண்டேகரின் மனோரஞ்சிதம், சரத்சந்திரரின் விஜயா, புற நானூறில் வரும் 'களிறு பொரக் கலங்கும் கழல் முள் வேலி' போன்ற பற்பல பாடல்கள்! இன்னும் இது போன்றவைகள் தான் இலக்கியம், உத்வேக மூட்டி அரைகுறை மனிதனை முழு மனிதனாக்கி, முழு மனிதனைத் தேவனாக்கவுள்ளவை!

என்னுடைய இந்தக் கருத்துக்கள் முழுவதும் நானறிந்த அளவில் மிகச் சரியானவை என்பதற்கு ஆதாரமாக மேலும் ஒரு எடுத்துக்காட்டு இங்கு தேவைப்படுகிறது.

அண்மையில் நாடு முழுவதும் போற்றும் தத்துவஞானியும் பதிப்புக்குரியவருமான பாரத இரத்தினம் ராதாகிருஷ்ணன் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு - இந்தியாவின் இதய ஒலி என் கைக்குக் கிடைத்தது. நான் அதில் நிறைய எதிர்பார்த்தேன், கடோப நிசத்தோ, தைத்ரியோப