பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

திணையுற்ற குறிஞ்சி, முல்லை
திகழ்ந்திடும் மருதம், நெய்தல்
துணையுற்றுத் தொழிலு முற்றுத்
தொய்வின்றித் துய்ப்பா ரேனும்,
இணையற்ற கல்விச் செல்வம்
இவர்களுக் கில்லை' யென்றால்,
புணையற்று நதியுற் றாங்குப்
போக்கற்றுப் போவா ரன்றோ?

மலையாய கடலு மாய
மண், மனை மாடா டெல்லாம்
நிலையாய செல்வ மேனும்,
நெஞ்சார நினைத்துப் பார்த்தால்
கலையாய செல்வம்,- கற்ற
கட்டைவிட் டகலாச் செல்வம்
தலையாய தென்னத் தக்க
தவச்செல்வ மன்றோ கல்வி!