பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தவிப்பு


உள்ளத்திற் குவப்பை யூட்ட
வொண்கதி ருதிக்கும் போது,
புள்ளொத்துப் புகழ்ந்து போற்றிப்
புலரியைப் பாடும் போது,
கள்ளொத்துக் கசியக் கன்னிக்
கமலங்கள் மலரும் போது,
வள்ளத்தில், தேனாய் நான்பொன்
வண்டெனப் பருகும் போதே!

என்னுடல், அதில்நேர் பாதி
இவளுட லெனவே யெண்ணும்
பொன்னுடல், புனல்பூப் போன்றாள்,
புலவனென் புலனப் போதில்
மன்னிடல் மாறு மாறாய்
மனங்கொள வந்தாள், மாந்தத்
தன்னிட முள்ள தெல்லாம்
தனித்துத்தந் தனுப்பு தற்கே!

‘கழியிலே கமலம் கண்டு
கருவண்டு கொண்ட' தென்னும்
விழியிலே முத்தும் வீழ்த்த
விரும்பினாள் போலும்! வீற்று
மொழியிலே முழுதும் சொல்லி
முடியாதின் றெனவே, முன்பென்
வழியிலே வந்து வாய்த்தாள்,
வறுமையைச் சுமந்து வாழ்ந்தே!

'வளமான வனத்து தித்து
வறண்டகான் புகுந்து வாடும்
இளமா'னென் றிரங்க வுற்றென்
இதயத்தி லிலங்கு மீவே!
‘குளமான தில்ல' மென்னக்
குவளைக்கண் ணீர்கொட் டாதே!
உளமான தளி;வாழ் வொண்பூ
வொப்பென வைப்பே" னென்றேன்.