ப தி ப் பு ரை
நீல வானில் நின்று நிலவும் இயற்கைச் சக்திகள் ஒன்று கூடிச் சத்தியத்தை நிலவுலகுக்கு அனுப்பும் போது வாழ்த்த வழங்கிய வார்த்தைகளிவை :
'இங்குள்ள அனைத்துப் பொருள்களின் பிரான சக்தியாக உள்ள சத்தியமே! நிலவுலகம் உன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நீயின்றி அங்கு மக்கள் அமைதியாக வாழும் பாங்கில்லை. அமைதியில்லாத வாழ்வு ஆபத்தானது என்பது நீயும் அறிகுவை.
உன் குரலில்தான் நீதி நிலை கொண்டுள்ளது; அன்பு அரும்பி மலர்கிறது. இன்பம் இரண்டறக் கலந்து இதயம் கமழ்கிறது. ஆகவே எங்கள் அனைவரையும் விடச்சத்தியமாகிய உன்னுடைய அவசியம் மக்களுக்கு இன்றியமையாதது. உன் குரல் அந்தி சந்தி இடைவிடாது அங்கு ஒலித்துக் கொண்டே இருப்பதாக! வானத்துக்குச் சூரியன் போல் மக்கள் இதயத்தில் நீயும் குடிகொண்டிரு! அவர்களுடைய மனம் வாக்கு காயங்களில் நீ சதா காலம் எண்ண மாயும் சொல்லாயும் செயலாயும் ஒளிமயமாக வெளிப்பட்டுக் கொண்டிரு! என்று.
அன்று பூமிக்கு வந்து சேர்ந்த சத்தியம் பல்லாயிரம் ஆண்டு காலம் அவ்வாறே நின்று நிலவிற்று. சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகிய மூன்றும் மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படைகளாகி மாண்பும் மகிழ்ச்சியும் மல்கி மலர ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் இன்பமாக வாழ்ந்தனர்; உலகில் அமைதி நிரம்பி வழிந்தது.
மக்கள் வாழ்க்கைக்கு மேலும் அத்யா அவசியமான மூலாதாரச் சக்திகள் மூன்றுள என்பர் அறிஞர். அவையாவன :