பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54


மண்ணில்நன் முல்லை யீயும்,
மகத்தான நறும ணத்தை!
கண்ணியற் கரும்பு மீயும்,
கவிதைபோ லினிக்குஞ் சாற்றை!
தண்ணிய கதலி யீயும்
தரமான கனிகள்! தாங்கித்
திண்ணிய தென்னை யீயும்
தேனெனத் திகட்டாத் தேங்காய் !

'எனதுன' தெனுஞ்சொல் லின்றி
யினைந்திருந் திவைக ளீயும்
கனிதனைக் கரும்புச் சாற்றைக்
காய்தனைக் கலந்த ருந்தி,
இனிதென மணமுந் துய்த்தே
இன்பமுற் றிருந்து மீயா
மனிதனைச் சுமந்திம் மண்ணே
மானக்கே டுற்ற தன்றோ?

போவது வருவ தற்றும்
புலவர்பா ராட்டும் வாழ்வுக்
'கீவது தவிர்த்து வேரறென்
றில்லை' யென் றிவைகள் வாழ
நோவது செய்து நொந்து
நூறுபேர் 'பாவி' யென்னச்
சாவது சரியா? சற்றும்
சகத்தியல் பரியா தோரே!

ஏமுற இயம்பு வேன்நான்:
ஏறுமா றின்றி யென்றும்
தாமுறு மனிதத் தன்மை
தளையவிழ் மலர்தா னாகக்
காமுறுங் கவிஞர், தம்மைக்
காண்பவர் கருதிக் கேட்டால்
நாமறுக் காம லீதல்
நாடெலாங் காண்ப? தன்றோ