உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆடும் மாடும்


சிகரத்தைச் சேர்ந்தி லங்கும்
செங்கதி ரெனவே சீராய்
நகரத்தை விட்டு வந்த
நாங்களு மூரைச் சேர,
அகரத்தோ டாகா ரம்போல்
ஆடுமா டணுகி மேய்ந்து,
துகிரொத்தும், மணி,முத் தொத்தும்,
தொடர்ந்துவந் தடுத்த தூரே!

நீப்பதற் கின்றி நின்ற
நிலத்தில்நீ ரொன்றச் செய்து,
'தோப்பது, துரவி தெ'ன்று
துப்பாகத் தோற்று வித்துப்
பூப்பது பொருந்திக் காய்த்தும்,
'போதாதே’ என்னும் நம்மைக்
காப்பதற் கெனத்தம் வாணாள்
கழிப்பதிம் மாடா டன்றோ?

சொலவாததி வாழ்வோ ராகச்
சுவைவைத்து நாவில் தம்மைக்
கொல்வித்து வாழ்வோ ராகக்
குடித்தன வுறுப்பாய்க் கொண்டு ,
பல்வித்தும் முளைத்த புன்செய்ப்
பதவலைப் பால்செய் தீயும்
'செல்வத்துள் செல்வ' மென்னச்
சிறந்ததிவ் வாடும் மாடே!

பயிரெனப் பண்ணு தற்கும்
பாங்காக வுதவி பண்ணிச்
செயிரென லின்றிச் சேர்ந்த
செவிலியாய்ப் பேணத் தீம்பால்,
தயிரென, நெய்மோ ரென்னத்
தரும்பசு மாடா டின்றி
யுயிரென வோம்பும் வாழ்வில்
உவப்பொரு துளியுண் டாமோ?