பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வழிபாடு செய்வதன்று என்று உணராத ரஜசும்தமசும் உச்சி குளிர்ந்து உள்ளம் குளிர்ந்து முக மலர்ச்சியோடு விடை பெற்றுக் கொண்டன.

ஒரு சில நாளில் உருவமற்ற சத்தியத்திற்கு உருவமுண்டாயிற்று. ஊர் மன்றில் மேடைக் கோயில் எழுந்தது. கொட்டுமுழக்குக் கும்பாபிசேகம் எல்லாம் கோலாகலமாக நடைபெறத் தொடங்கின.

சுருங்கக் கூறின் சத்தியம் அல்லது பிர்மம் சிறைப் படுத்தப்பட்டாயிற்று. சத்தியம் என்ற பெயர் சாமி என்று மாற்றமடைந்தது.

உலகம் இதற்குப்பின் கண்ட மாற்றம் என்ன? பின்பும் அதேபழய குருடிக்கதை தான்; உடலையும் உயிரையும் கண்ட மனிதன் தன்னுள் ஒரு உள்ளம் இருப்பதும், உள்ளம் உண்மைக்காகவே உள்ளது என்பதும் உணராதபோது அச்சமும் கவலையும் வம்பும் வழக்கும் பொய்யும் வஞ்சனையும் பார்த்தினியப் பூடாய் வளர்ந்து பாரைப் படுநாசப்படுத்திக் கொண்டிருப்பதறியாது வேதனை பாடல்களாய் பண்ணினிமையோடு வெளிப்படலாயிற்று.

'சாவிலிருந்து என்னைச் சாகாமைக்கு அழைத்துச்செல்; இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச்செல், நரகத்திலிருந்து என்னைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்' என்று.

உள்ளமிருந்தும் உணராத இந்த மக்களை சுவர்க்கத்துக்கு யார் அழைத்துச் செல்லவுள்ளனர். குருடனக் குருடன் எங்கு அழைத்துச் செல்ல இயலும்?

அன்றிலிருந்து இன்று காறும் இவர்களுக்குப் பொழுது புலாவும் இல்லை; பொற்கோழி கூவலும் இல்லை. எனினும் கோவில்கள் தோறும் இந்தக் கூக்குரல்_மாத்திரம் ஒயாதொலித்துக் கொண்டே உள்ளது.