பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிந்தனை


'இசையாடித் துதிசெய் வோரா
லிழிந்தது தமிழ் நா' டென்று
வசைபாடும் வகையாய் வந்த
வஞ்சனை வழியை மாற்றற்
கசைபோடும் பசுவா நானங்
கமைதியா யமர்ந்தே னாய்ந்து
பசைபோடும் பதமாய்ப் பற்றும்
பைந்தமிழ் பாட்டாக் கற்கே!

‘பரப்பிடும் பயன்ப டாத
பக்திப்பொய் பரிந்து நீக்கத்
தரப்படும் மருந்திஃ' தென்னத்
தரமான கவிதை யாத்துச்
சிரிப்புடன் மக்கள் சேர்ந்து
செழிப்பாக வாழு மாறாய்ச்
சரிப்படுத் திடவும் கூடச்
சாத்திய மெனச்சங் கித்தேன்.

அழகிய லமையா தேனும்
அறிவிய லமைத்திவ் வூரில்,
பழகிய பண்பால் நண்பன்
பைந்தமிழ் பரப்பற் கொப்பின்,
'எழுகுயி லிசைக்கொத் தேற்ப
எழில் மயி லாடிற்' றென்னும்
ஒழுகிய லாமென் றுள்ளி
யுவகையோ ரூற்றா யிற்றே!

அயலாகா தருமை நண்பன்,
அருந்தமிழ்ப் பயிர்ச்செய் யாயின்,
கயலாகி மிளிருங் கண்ணாள்
கதிரிடுங் களமாய்க்- காணும்
புயலாகிப் பொலிந்தென் னுள்ளம்
பொன்னாகி முழங்கி மின்னி,
வயலாக வூர்க-ளென்வாய்
வானாகிப் பொழிந்தி டாதோ?