பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

'ஆதார' மெனஇன் றென்முன்
அகங்களித் தமரும் அன்பர்
காதாரக் - 'கவின்மி குந்த
கமலமென் மலர்கள் கண்டு
போதார மதுக ரம்போய்ப்
புகுந்திசை பொழிந்த' தென்னத்
தாதாரும் தமிழைப் பாடித்
தளை தவிர்த் திடச்செய் வேனோ?

அளிமனங் குளிரச் செய்த
அரவிந்த மனையோர்க் காய் , வான்
வெளிமனங் குளிர்ந்து பெய்த
விடுநிலத் திளம்புல் லார்ந்து
களிமனங் கிளரக் காடிக்
கன்றினைக் காணு மாவின்
வளமென வள்ளங் கொள்ள
வழங்கும்பால் மடியா வேனோ?

'முத்தினை வித்திற்' றென்ன,
முகிழ்த்துவிண் மீன்கள் மொய்க்க,
மத்தினாற் கடைந்தெ டுத்த
மதுரித மாட்டு வெண்ணெய்
ஒத்தினி துதித்துத் திங்கள்
உலகிரு ளகற்ற லொத்திங்
கித்தின மிவர்த முள்ளத்
திருளறற் கிலங்கு வேனோ!

பசித்திடும் பாவல் லார்க்குப்
பாலொடு பழந்தந் தாரப்
புசித்திடப் புரிந்து வந்த
புலனெறித் தமிழ கத்தே,
வசித்திடு மூர்கள் தோறும்
வறுமையை வளர்த்து வாழ்வை
நசித்திடச் செய்யும் பக்தி
நஞ்செடுத் தெறிய நானே!