பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளைவு


கற்றது கருதார்; கண்ணில்
காண்பதே காட்சி யாய்மெய்ப்
பற்றுத லற்றார்; பையில்
பணம்பற்றிப் பதுக்கிக் கட்சிப்
புற்றதில் புகுவார்; ஆட்சிப்
புலியாகிப் புறத்தில் பாய்வா
ருற்றதி லுணவுப் பஞ்சம்
உறுவது முரிமைப் போரே!

கொடைமுறை குன்றிச் செல்வம்
கொடியவர் கையில் கூடத்
தடைமுறை தவிர்த்து விட்டுத்
தருமங்கள் தலைகீ ழாக்கி,
நடைமுறை நாடா தாட்சி
நலங்கெடச் செய்யின், நண்பா!
கடைமுறை காண்பர், உண்மைக்
கலைமுறை காணா தாரே!

எண்ணவே, இன்பம் தேக்கி
இதயத்தின் உணர்வை யள்ளும்
வண்ணமும், வனப்பும் வாய்த்து
வான்மிசை நிலவு குத்துக்
கண்ணினுக் கொளிய ளிக்கும்
கவின்மதி தேய்ந்த தென்னத்
தண்ணிய மதுரைச் சங்கத்
தமிழ்தேயத் தருமந் தேய்க்கும்,

மாட்சியில் லாத மட்ட
மனிதர்பே ராசை யால்மற்
கட்சியை மாற்றித் தீரும்
அவசியம் நேரும்; அந்தக்
காட்சியும் உலகம் கண்டு
களித்திடும்; அதற்கும் காலம்
நீட்சியி லில்லை; சால
நெருங்கிக்கொண் டுளது, நேர்ந்தே!