பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

"'எல்லையே யின்றி நின்றாங்
கிதயத்தைப் பிழிந்த' தென்னத்
தொல்லையே தோன்று மேனும்,
'துணிவொன்றித் தொடர்ந்து நாளும்
சொல்லையும் சுவையாய்ச் சொல்லிச்
சுயமாய்நற் செயலும் செய்து,
முல்லையாய்க் கமழ மூண்டு
முயலுக!' என்பீர் நீரே.

வேறுசொல் வேண்டா மேனும்,
வேற்றுமை தவிர்த்தல் வேண்டி
மாறுசொல் லாமற் குந்தி
மன்றுற்றுப் பேசி னோர்சொல்,
நூறுசொல் கேட்டுள் ளேம்யாம்!
நுணுகியா ராயின், நோற்கும்
பேறுசொல் லுஞ்சொ லுங்கள்
பெருஞ்சொல்தா" னென்றாள், பேதை!

பொற்பினிற் பூவைப் போன்று
புலன் மகிழ் விப்பாள்; பூண்ட
கற்பினுக் கரசி! காசில்
கவிஞனைக் கனப்ப டுத்தும்
சொற்பொதி பொருளைச் சுட்டிச்
சுவையுறச் சொன்ன சொற்கள்,
அற்புத மெனினு மஃதென்
அகத்தினை யுறுத்திற் றன்றே!

"புறவெனப் பொழுது பூரா
பொருளையே நாடிப் போக்கும்
உறவினர்க் குள், நா 'னொன்று
வொருகுயி' லெனுமா றுள்ளேன்;
அறிவென அறிந்த வொன்றை
அருந்தமிழ்க் கவிதை யாப்பேன்;
'செறுவெனத் தொறு'வெ னத்தான்
செப்பவொன் றின்றி" யென்றேன்.