பக்கம்:புரவலன், வெள்ளியங்காட்டான்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

'பொறிவண்டு புன்னைப் பூவில்
புதுமது வருந்திப் போந்து,
‘துறவுண்டு துணை வீ! யுன்றன்
தொடர்பினி வேண்டே' னென்றே
முறிவுண்டு போகும் போது,
முருங்கையின் புதிய பூவில்
நறவுண்டு திரும்பிற்' றென்றே
நகைத்ததோர் நாத வண்டே!

பசுந்தழை வண்ண மேனிப்
பவளவாய்க் கிளிபார்த் தென்னைக்
கசிந்தழைத் 'தையா! காசில்
கவிஞனே! கற்றோர் நெஞ்சில்
நிசந்தழைத் திரங்கச் செய்க!
நெறிமுறை யின்றி யென்னை
நசிந்தழக் கூண்டி லிட்டே
நலிவித்தா' ரென்ற தங்கே!

‘பூவது கமழ்ந்து நாளும்
புலன்மகிழ் வித்தற் குண்டு;
நாவிது நறவம் மாந்தி
நாதமாய்ப் பொழிதற் குண்டிங்
கீவது தவிர்க்கா தெம்மை
யென்றுங்கொண் டிருந்தி லங்கும்
காவிது கண்ணிற் கண்ட
கடவு'ளென் றதுகார் வண்டே !

'காக்கையென் றாலும் சற்றும்
கருணையே யில்லாக் காக்கை!
யாக்கையைக் கழுவுங் கால்
தன் னகங்கழு வாத காக்கை!
கூக்குர லிடவே கொத்திக்
குழந்தைகை முறுக்கைக் கொண்ட
போக்கிரிக் காக்கை' யென்றே
புறவுளம் புழுங்கிற் றங்கே!