பக்கம்:புராண மதங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
புராண - மதங்கள்


பெரிய புராணத்தைப் பற்றிய நமது கட்டுரைகள், தமிழ் நாட்டுச் சைவமெய்யன்பர் கூட்டத் தலைவர் கட்கும், முத்தமிழ் கற்ற வித்தகர்கட்கும் அனுப்பப் பட்டதாம், கோபங் கொண்ட நண்பரொருவரால்! நல்ல காரியம் நடைபெற்றது. இதுபோன்ற கோபம், இலாபமே! அந்தத் "தலைவர்கள்" நமது கண்டனத்தைப் படித்துவிட்டு, என்ன எண்ணுவார்கள்? கழுவேற்றுகிற காலமாக இல்லையே! கடம்பா! என்று வருந்துவர்; வேறென்ன செய்வர். சபிக்கத் தெரிந்தவர்கள் அதிலே ஈடுபடுவர்; ஆனால், நமது வாதத்திலே இன்ன இடம் ஒடிசல் என்று எடுத்துக் காட்டத் துணியார். பல "அன்பர்களுக்கு" நமது கண்டனச் சுருள் அனுப்பப் பட்டது கேட்ட நாம், மேலும் அவர்களுக்கு விருந்தளிக்க, பெரிய புராணத்தைப் பற்றிய விளக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்குவோம். இளைஞர் உலகம் இன்று, எதெது தேவை என்று எண்ணுகிறதோ, அவைகள் யாவுமோ அல்லது அவைகளிலே பெரும் பகுதியோ, புராண இதிகாசங்களிலே உண்டு என்று கூறுவதன் மூலம், மேலும் சில நாட்களாவது, அவைகளுக்கு உயிர்தர முடியுமா என்ற முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளவாகள், பெரிய புராணத்திலே, சீர் திருத்தக் கருத்து இருப்பதாகவே பேசுகின்றனர். இதனால், அந்தப் புராணங்களிலே, சீர்திருத்தக் கருத்துக்கள் உள்ளனவா இல்லையா என்று ஆராயப் புகுமுன், ஒரு உண்மை தெளிவாகிறது. அதாவது, சீர்திருத்தம் அவசியம் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், அதற்கான வேலையில் பலர் ஈடுபட்டுள்ளதை உணருகிறார்கள். வேறு விஷயங்களிலே மக்கள் கொண்டுள்ள அக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/6&oldid=1033348" இலிருந்து மீள்விக்கப்பட்டது