74
புராண-மதங்கள்
பயிர் வளரவில்லை எதிர்பார்த்தபடி, என்றால் விதையால் வந்த தவறா, உழவு முறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை—பச்சையம்மனுக்குப் பொங்கலிடுவது — அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது, என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீதுதான் எண்ணம் போகிறது.
தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலாகாலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று பயந்து, மழையைப் பொழியச் செய்ய வருண ஜெபம் செய்வதற்காகப் பார்ப்பனர்களை, ஆஸ்தானத்தின் செலவிலே நியமித்தனர். வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள்—இனாம்கள்—தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, அப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் இந்தப் பரம்பரையினரிடம் உள்ளன.
இயற்கை முறையிலே, ஏதேனும் கோளாறு காணப்பட்டால், அதாவது மழையே பெய்யாமலிருப்பது அல்லது மழை அளவுக்கு மீறிப் பெய்வது முதலிய ஏதேனும் நேரிட்டால், கடவுளின் கோபமே அதற்குக் காரணம் என்றுதான் பற்பல நாடுகளிலேயும் ஆதிநாட்களிலே எண்ணம் இருந்தது. பயங்கரமான இடியே, பகவானின் கோபச்சிரிப்பு என்றும், விழியைப் பழுதாக்கும் விதமான மின்னலை, அவருடைய கை வேலின் வீச்சென்றும்தான் அக்கால மக்கள் நம்பினர். எனவே ஏதேனும் பூஜை செய்து கடவுளின் கோபத்தைப் போக்கினால், அவர் மனம் மகிழ்ந்து, இயற்கையை