அண்ணாதுரை
75
முறைப்படி நடந்துகொள்ளச் செய்வார் என்று நம்பினர்—அதற்கேற்றபடியே நடந்துகொண்டனர். ஆனால் அறிவுத் தெளிவு அங்கெல்லாம் ஏற்பட்டுக், கற்பனைகள், கட்டுக்கதைகள் ஆகியவற்றை மறந்து, காரண விளக்கத்தில் கவலை செலுத்தி, ஆராய்ச்சி மனப்போக்கினராயினர்.
இங்கு மட்டுந்தான் இன்றும் அந்தப் பழைய நம்பிக்கை பழுதுபடாது இருக்கிறது. காரணம், அந்தப் பழைய நம்பிக்கையை அப்படியே வைத்துப் பாதுகாப்பதால் இலாபமடையும் சூதுமதியினர் இங்கு இருப்பதுதான்.
"பஞ்ச பூதங்களாம் அப்பு, பிருதுவி, தேயு, வாயு, ஆகாயம் என்பனவற்றைப் பற்றி—" என்று ஆரம்பித்து பஜனை பாடுவதே போதும் என்று நாம் இருந்துவிட்டோம். மற்றவர்களோ, அவைகளை ஆராயத் தொடங்கி, பல அரிய காரியங்களைச் சாதித்தனர்— இன்றும் சாதித்த வண்ணம் உள்ளனர்.
இவ்வளவு பெரிய இயற்கைக் கோளாறையும் கண்டு அவர்கள் மிரண்டு, மனதை மறக்கடித்துக் கொண்டதில்லை. எவ்வளவு சிறிய சம்பவத்தையும், ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளத் தவறியதில்லை.
கோளங்களையும் ஆராய்கிறார்கள், கொசுவைப் மற்றியும் ஆராய்ச்சி நடத்துகிறார்கள்.
வானத்திலே வட்டமிட்டுப் பார்க்கிறார்கள், கடலுக்குள்ளே மூழ்கிப் பார்க்கிறார்கள் - எங்கெங்கு என்னென்ன காட்சிகள் உள்ளன, கருத்துக்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய.