98
புராண-மதங்கள்
வில்லை. அதனால் தாங்கப் படும் தேவியும் தெரியவில்லை, மாறாக, சதா தன்னைத்தானே சுற்றிக்கொண்டும், சூரியனைச் சுற்றிக்கொண்டும் வருகிற பூமிதான் தெரிந்தது! உலகம் இதைத்தான் உண்மை என்று ஏற்றுக்கொண்டதே தவிர—நாம் உட்பட—பூமிக்கு இலட்சணம் கற்பித்த தமது முன்னோர்களின் ஜடை முடியையும், காவி கமண்டலத்தையும், யாக யோகத்தையும் விளக்கி விளக்கிக் கூறினாலும், "பூர்வீக உண்மையை" ஞானக் கண்ணினர் கூறின உண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை! நம்மிலே, அகோர வைதிகருக்கும் அந்தத் துணிவு பிறக்காது!
சூரியனுக்கும் நமக்கும் உள்ள தொலைவைத் தீர்மானித்திருக்கிறார்கள். பூமி, மணி ஒன்றுக்கு எழுபத்திரண்டாயிரம் மைல் வேகத்தில் சுற்றி வருகிறது என்று கணக்கிட்டுக் கூறுகிறார்கள், எடை, இயல்பு, வேகம், செல்லும் பாதை, எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கூறியுள்ளனர். ஞானக் கண்ணினர் கண்டறிந்ததாகக் கூறப்படும் உண்மைகள், வெறும் கற்பனை, அல்லது யூகம், அல்லது தத்துவார்த்தம், என்றாகிவிட்டன. உலக அறிவு மன்றத்தில் விஞ்ஞானக் கண்ணினர் கண்டறிந்து கூறிடும் உண்மைகளே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புது உண்மைகளை அறிந்திருப்பது தான், கல்வி கற்றதற்கு அடையாளமென்றும், இந்த உண்மைகளை ஊருக்கு உரைப்பதுதான் உண்மை உபதேசம் என்றும், இந்த உண்மைகளுக்கும் அப்பால் இருக்கும் உண்மைகளை நாடிச் செல்வதுதான் அறிஞர் கடன் என்றும், அங்கெல்லாம் கருதப்படுகிறது. இங்கு, பழைய ஐதீகத்தை நம்புவதும், அதற்கேற்றபடி காரியங்கள் செய்வதும் விவேகியின் செயலாக மட்டுமல்ல, பக்தனின் இலட்சணமாகக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
✽✽✽