பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

97


சொற்பொருள்: மீக்கூறுநர் - மிகுத்துச் சொல்லுபவர்கள். 2.

உளையக் கூறி - வெறுப்பச் சொல்லி. 16. நில் வரை - நிற எல்லை.

73. உயிரும் தருகுவன் !

பாடியவர்: சோழன் நலங்கிள்ளி, நல்லுருத்திரன் பாட்டு’ எனவும் பாடம் திணை: காஞ்சி. துறை: வஞ்சினக் காஞ்சி.

('இன்னது பிழைப்பின் இதுவாகியரென உரைத்தலால்' வஞ்சினக் காஞ்சி ஆயிற்று. இரக்குவர் ஆயின், இன்னுயி ராயினும் கொடுப்பேன்; என் உள்ளத்தை இகழ்ந்தாராயின் அவர் உய்ந்து போதல் அரிது’ என்னும் சொற்கள், இவனுடைய பெருமாண்பைக் காட்டுவனவாகும்.)

மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென், இந்நிலத்து, ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் 5 உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே, மைந்துடைக் கழைதின் யானைக் கால்அகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச் சென்று அவண் 10

வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய

தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்

பல்லிருங் கூந்தல் மகளிர்

ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

என்னைப் பணிந்து வேண்டுவாரானால், என் அரசு

மட்டுமென்ன, என் உயிரையே கேட்பினும் கொடுப்பேன், என் உள்ளத்தை அறிவில்லாது இகழ்ந்தவன், தூங்கும் புலியை இடறிய குருடனைப்போல உயிர் பிழைத்தலே மிகவும் அரிதாகும். யானையின் காலடியிலே பட்ட மூங்கில் முளையைப் போல, என்னை எதிர்க்கும் பகைவரை அவர் ஊர்வரையும் சென்று ஒழிப்பேன். ஒழியேனாயின், காதலற்ற பொதுமகளிர் தழுவ, என் மாலை துவள்வதாக! (என் தேவியும் என்னை ஒதுக்குவாளாக என்பது கருத்து)

சொற்பொருள்: 3. தாயம் - பழையதாய் வருகின்ற உரிமை. தஞ்சம் - எளிது; அரசு கொடுத்தல் எளிது. 5. ஆற்றல் உடையோர் - அமைச்சர் படைத்தலைவர் முதலாகிய வலிமையுடையோர்.