பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புறநானூறு



மூலமும் உரையும்

1. இறைவனின் திருவுள்ளம்!

இது கடவுள் வாழ்த்து. இதனைப் பாடியவர் பெருந் தேவனார். இவர், பாரதக் கதையைத் தமிழில் முதன்முதற் பாடியவர். அதனால், 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' என வழங்கப்பெறுவர். இறைவன் பேராற்றலும் அளவில் தூய்மையும் உடையவன்; அவனை 'அருந்தவத்தோன்’ என இதன்கண் பாடுகின்றனர். சங்கத் தொகைநூல்கள் பிறவற்றிலும், இவர் பாடிய கடவுள் வாழ்த்துக்களைக் காணலாம்.

கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை, 5

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; 10

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

தவமுதிர்ச்சியின் சான்றாவது அவனது தாழ்சடை. அனைத்து உயிர்க்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்ட, நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையிலே உள்ளது. மேலும், அவன் தலையிலும் மார்பிலும் கொன்றைப்பூவினை அணிபவன். வாகனமாகவும், கொடியாகவும், தூய ஆனேற்றைக் கொண்டிருப்பவன். அவன் கழுத்தை நச்சுக்கறை அழகு செய்கிறது. மறைகளை ஒதுபவரான அந்தணரால் அது புகழவும் படுகிறது. பெண் உருவை ஒரு பாகத்திலே அறியக்காட்டியும், தன்னுள் அதனை அடக்கி ஒளித்துத் தானாகத் தனித்தும் அவன் விளங்குகின்றான். அவனது நெற்றிக்கு வனப்புத் தரும் பிறை பதினெண் தேவரால் போற்றவும் படுகிறது. (இப்பேரிறைவனைப் பணிபவர் தாமும் தம் துயர் தீர்வர் என்பது இது)