பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

புறநானூறு - மூலமும் உரையும்



சொற்பொருள்: 1. கண்ணி - தலையில் சூடப்படுவது. கார் காலத்தில் மலர்வதால் ‘கார் நறும் கொன்றை என்றார். 2. தார் - மார்பில் அணியப்படுவது. காமர் - அழகு.1. ஏமம் - புணை, காவல். 12. கரகம் - கமண்டலம்.

மேற்கோள்: 1. ஆசிரியப் பாவிலே ஈற்றயலடி முச்சீருடைய தாய் வந்ததற்கு இச் செய்யுளைப் பேராசிரியர் காட்டுவர். (தொல்.செய்சூ.68). அணியலும் அணிந்தன்று’ என்பது ஒருபொருட் பன்மொழி எனவும் (நன். சூ.397), வேற்றுமைக் கண் நகரம் மிகாமைக்குக் கறைமிடறு அணியலும் அணிந்தன்று' என்பதனைக் காட்டியும் (நன். சூ. 182) உரைப்பர், மயிலைநாதர்.

'கறை மிடறு அணியலும் அணிந்தன்று' என்புழிக் கறை மிடற்றை அழகு செய்தலையும் செய்தது என, முழுதும் காரிய வாசகமாகியே நின்றவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர், (தொல் வேற்றுமை மயங்கியல் சூ 29)

சிறப்பு: இதன்கண் உரைக்கப்பெறுகின்ற சிவமாகிய முழுமுதலின் தன்மை மிகமிகச் செவ்விது ஆகும். சிவனுடைய கண்ணியும், தாரும், ஊர்தியும், கொடியும் கூறி, அவனுடைய பெருங் கருணையையும் வியந்து,பெண்ணும் ஆணும் தானேயாகித் திகழும் அந்த ஆதித் தனிமுதலான தன்மையையும் போற்றி, அவனைச் சார்ந்த தேய்ந்த பிறையும் பதினெண் கணத்தவரால் போற்றப் பெறும் பெருநிலை எய்திற்று எனக்காட்டி, அவனை நாமும் அடைந்தால் அதனால் நமக்கும் அத்தகு மேம்பாடு வந்தடையும் எனச் சொல்லாமற் சொல்லி, இத்துணை மேதகு நிலையினனேனும் அவன் தவத்தோனாக விளங்குகின்றான் எனத் தன்னையுணர்ந்து தனித்து அடங்கும் செவ்வியையும் அறிவுறுத்துகின்றது இச் செய்யுள்.

இறைவனாற் காக்கப் பெற்றுப் பெருநிலை அடைந்த பிறையினைத் தமக்கும் ஓர் இலக்காக கொண்டு, இறைவனோடு அதனையும் போற்றித் தொழுவது பண்டைய மரபாகும். 'தொழுது காண்பிறையின் தோன்றி எனக் குறுந்தொகைப்பாட்டினும் (172), 'ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழுஉம்' என அகப் பாட்டினும் (239) இம் மரபினைப் பிற சான்றோரும் காட்டுதல் காண்க

2. போரும் சோறும்!

பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர். பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். திணை: பாடாண். துறை: செவியறிவுறுஉ; வாழ்த்தியலும் ஆம்.