பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

புறநானூறு - மூலமும் உரையும்



- 111. விறலிக்கு எளிது!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வேள் பாரி. திணை: நொச்சி. துறை: மகள் மறுத்தல். சிறப்பு : பாரியின் மறமேம்பாடும், கொடை மடமும் கூறுதல்.

(மகள் தர மறுத்துப், 'பாடிக் கிணைமகள் போல இரந்துவரின் குன்றைப் பெறுவீர்” என்றனர். அப்போதும் மகளிரைப் பெற மாட்டீர் என்பதும் ஆம்)

அளிதோ தானே, பேரிருங் குன்றே! வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

பெரிய கரிய குன்றமான இப் பறம்பு வெல்வதற்கு எளிதோ? அதனை வேலால் வெல்லுதல் வேந்தர்க்கும் ஒருபோதும் இயலாது. ஆனால் விறலிக்கோ, அவள் கிணையுடன் பாடினவளாக வந்தால், அடைவதற்கு மிகவும் எளிது!

சொற்பொருள்: 1. அளிது - இரங்கத்தக்கது. 2. வேறல் - வெல்லுதல், 3. புரையும் - ஒக்கும். 4. கிணைமகட்கு - கிணையை யுடைய விறலிக்கு. -

112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர். திணை: பொதுவியல். துறை : கையறு நிலை. - - r -

('மலையையும் இழந்தேம்; தந்தையையும் இழந்தேம் எனத் தம் நிலைக்குப் பெரிதும் கலங்கிக் கூறிய பாட்டு இது)

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில், எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! 5

அந்த மாதத்தில், இந்த வெண்ணிலவு இப்படியே எரிக்கும் வேளையில், எம் தந்தையை உடையவராயும் இருந்தோம்; எம் குன்றினையும் பிறர் கைக்கொள்ளவில்லை. இந்தத் திங்களில், இவ் வெண்ணிலவில், வென்றெறி முரசின் வேந்தர்கள் எம் குன்றையும் கவர்ந்து கொண்டனர்; யாமோ எம் தந்தை இல்லாதவராகவும் ஆயினேம்!