பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

புறநானூறு - மூலமும் உரையும்


இத் தன்மையேம் ஆயினேம் 11. படாஅம் படாத்தினை: போர்வையை, மஞ்ஞைக்கு - மயிலுக்கு. 13. நன்று என - அழகிது என்று.

142. கொடைமடமும் படைமடமும்!

பாடியவர்: பரணர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

'கொடை மடம் படுதல் அல்லது, படைமடம் படான் என, அரசனது இயல்பு மிகுதி தோன்றக் கூறலான் இயன்மொழி ஆயிற்று.”

அறுகுளத்து உகுத்தும், அகல்வயல் பொழிந்தும்,

உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்,

வரையா மரபின் மாரி போலக்,

கடாஅ யானைக் கழற்கால் பேகன்

கொடைமடம் படுதல் அல்லது, 5

படைமடம் படான் பிறர் படைமயக் குறினே.

வயலிலும் குளத்திலும் களர்நிலத்திலும் ஒரு நீரதாகப் பெய்யும் மழை போன்று, இரவலர் எத் தகுதியினராயினும் வரையாது ஒப்பக் கொடுக்கும் இயல்பினன் பேகன். கொல் யானையும் வீரக்கழலும் உடைய அவன், கொடையின் கண்ணே இவ்வாறு மடமையுடையவ னேனும், போரில் தன்னொத்த வீரருடன் பொருபவனேயன்றித் தனக்குத் தகுதியற்றாருடன் பொரும் மடமையோன் அல்லன்.

சொற்பொருள்: 1. உகுத்தும் - பெய்தும். 2. உறும் இடத்து உதவாது - குளத்தும் விளைநிலத்தும் பெய்யாது. உவர்நிலம் ஊட்டியும் - களர் நிலத்தை நிறைத்தும். 5. கொடைமடம்படுதல் - கொடுக்கும்போது அளவுகடந்து வழங்குதல்.6.மயக்குறின் கலந்து பொரின் படைமடம் படாஅன் - அப் படையிடத்துத் தான் அறியாமைப்படான்.

143. யார்கொல் அளியள்!

பாடியவர்: கபிலர். பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன். திணை: பெருந்திணை. துறை: குறுங்கலி, தாபதநிலையும் ஆம். குறிப்பு: துறக்கப்பட்ட கண்ணகி காரணமாகப் பாடியது.

("அருள் பண்ணவேண்டும்’ என்று இரந்துகொண்டு கூறினமையின் குறுங்கலி ஆயிற்று. கணவனைப் பிரிந்து அவள் இருந்த நிலைமையைக் கூறுதலின் தாபத நிலையும் ஆம். மிகச் சிறந்த பெண்மைப் பண்பினை விளக்கும் செய்யுள் இது)