பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

183


(நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாக வேண்டும் என்றதனால் பரிசிற்றுறை ஆயிற்று. தலைவனது இயல்பைக் கூறுதலால் இயன்மொழியாகவும், வென்றி மேம்பாட்டைக் கூறுதலால் அரச வாகையாகவும் கொள்ளப்படும்)

அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக் கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக், கிளையொடு, கடுங்கண் கேழல் உழுத பூழி, நன்னாள் வருபதம் நோக்கிக், குறவர் 5

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார், மறையான் கறந்த நுரைகொள் தீம்பால், மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி வான்கேழ் இரும்புடை கழாஅது, ஏற்றி, 10

சாந்த விறகின் உவித்த புன்கம், கூதளங் கவினிய குளவி முன்றில், செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி, 15

வடிநவில் அம்பின் வில்லோர் பெரும! கைவள் ஈகைக் கடுமான் கொற்ற: வையக வரைப்பில் தமிழகம் கேட்பப், பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர், நாளும், 20

ஈயா மன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே!

கேழல் உழுத புழுதியிலே விதைத்த தினையும் விளைந்து கதிர்முற்றியது. நல்ல நாளிலே புதிதுண்ண எண்ணிய குறவர் மானிறைச்சிப் புலால் நாறும்பானையைக் கழுவாதே, மரையாவின் பாலை உலைநீராக்கிச், சந்தன விறகால் எரித்து, அத் தினையைச் சமைத்து, அகன்ற வாழை இலையிலே பலரோடும் பகுத்துண்ணும் வளமுடைய, குதிரைமலைத் தலைவனே! கூர்வேலும், வேங்கை மாலையும், வடித்த அம்பும் கொண்ட வில்வீரர்கள் தலைவனே! கைவண்மையும் கடிய குதிரையும் உடைய கொற்றனே! கொடாதவர் நாண, என்றும் கெடாது பரந்த நின் தூய பெரும் புகழை இத் தமிழகம் முழுதுங்கேட்கத், தம் செவ்விய பொய்யாத நா வருந்துமாறு, பரிசிலர் நின்னை வாழ்த்திப் பாடுவர் என்பர். அங்ங்னமே யானும் பாடுவேன். எனக்கும் அருள் செய்வாயாக!