பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

197


பொருதற்கரிய காவற் காட்டினையும் உடைய 'வல்லார்' எனும் ஊர். அதன் தலைவன் பண்ணன். உண்ணாது வாடும் நின் சுற்றம் உயிர் பிழைக்க வேண்டுமாயின், அவன் பகைவர் தேயங்களை நோக்கிப் படைகொண்டு செல்வதற்கு முன்னர், பரிசில் பெற்று வறுமை போக்க, விரைந்து இப்பொழுதே அவன்பாற் செல்வாயாக!

சொற்பொருள்: 1. வெள்ளில் - விளாம்பழத்தை 2. கருங்கண் எயிற்றி - கரிய கண்ணையுடைய மறத்தி, 4. பெருங்குறும்பு உடுத்த - பெரிய அரண் சூழ்ந்த, கடிமிளை - காவற் காட்டினையுடைய. 7. வலாஅரோன் - வல்லார் என்கிற ஊரிடத்தான்.

182. பிறர்க்கென முயலுநர்!

பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி. திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.

('பிறர்க்கென முயலுநர் உண்மையின், இவ்வுலகம் உளதாயிருக்கின்றது' எனக் கூறி, அவ்வாறு முயல்வதே சிறந்த உறுதிப் பொருளாகும் என்றனர். 'கைக்கிளைப் புறனாய் அமைந்த செந்துறைப் பாடாண் பாட்டு இது' என்பர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ.27)

உண்டால் அம்ம, இவ்வுலகம், இந்திரர்; அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின், உயிருங் கொடுக்குவர்; பழியெனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித், தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

இந்திரர்க்குரிய அமுதமே கிடைப்பதாயினும், அது தமக்கு இனியது எனக் கருதித் தாமே தனித்து உண்டலும் இல்லாதவர்; சினமற்றவர்; பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாளாது சோம்பி யிருப்பவருமல்லர், புகழ் எனின் உயிரும் கொடுப்பவர்; பழி எனின் உலகம் முழுவதுமே பெறுவதாயினும் மேற் கொள்ளார்; அயர்வு அற்றோர்; அத்தகைய மாட்சிமைப் பட்டவராக வாழ்பவர் உயர்ந்தோராவர். அவர் தமக்கென எதுவும் செய்யாது, பிறர்க்கென உழைக்கும் உண்மையான இயல்பு உடையவராதலே அவர் பெருந் தகுதிக்குக் காரணமாகும். இவராலேயே சிறப்புடன் வாழ்கிறது உலகம்.