பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

புறநானூறு - மூலமும் உரையும்


உலக இயற்கையை நிலைநிறுத்தி நாட்டிற் செலுத்தப்படும் நாடு காவலாகிய சகடத்தினைச் செலுத்துவோன் மாட்சிமை யுடையவனாயின், உலக வாழ்வும் கேடற்றுச் சான்றோர் வகுத்த நெறி வழியே நன்கு நடக்கும். அவ்வாறு காத்தல் இலனாயின், எந்நாளும் பகையென்னும் சேற்றிலே அழுந்தி அவன் கெடுவதுடன், அவன் குடிமக்களும் பலப்பல துயரங்களுக்கும் உள்ளாகிக் கெடுவர்.

சொற்பொருள்: 3. ஊறு - இடையில் உண்டாகும் கெடுதல். ஆறு இனிதுபடும் வழியில் இனிதாகச் செல்லும். 4. உய்த்தல் தேற்றானாயின் - அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளியமாட்டானாயின்.5.பகைக்கூழ் அள்ளல்பட்டு-பகையாகிய செறிந்த சேற்றிலே அழுந்தி. 6. தலைத்தலைதரும் மேன் மேலும்

உண்டாக்கும்.

186. வேந்தர்க்குக் கடனே!

பாடியவர்: மோசிகீரனார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. (வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது. ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆம்)

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

உலக உயிர்களைக் காப்பது நெல்லும் நீரும் மட்டும் அன்று. பரந்த இவ்வுலகம் வேந்தனின் முறையான காவற் சிறப்பாலேயே செவ்விதாக நிலைபெறுவதனால், அரசனே உண்மையாக உலகுக்கு உயிர் ஆவான். அதனால், வேலால் மிக்க படையுடைய வேந்தனுக்குத், 'தானே உலக நல்வாழ்வின் உயிர்ப்பாக விளங்க வேண்டுபவன்' என உணர்ந்து, அதற்கேற்ப மக்களைப் பேணி நடப்பதே கடமையாகும்.

187. ஆண்கள் உலகம்!

பாடியவர்: ஒளவையார். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. (ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்பது இது. மிகச் சிறந்த செய்யுள்)

நாடா கொன்றோ, காடா கொன்றோ,

அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே!