பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

புறநானூறு - மூலமும் உரையும்


192. பெரியோர் சிறியோர்!

பாடியவர்:கணியன் பூங்குன்றன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி.

(ஆர் உயிர் முறைவழிப் படுஉம்' என்னும் உறுதியை நயமாகக் கூறும் செய்யுள் இது)

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே, முனிவின், 5 இன்னா தென்றலும் இலமே, 'மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படுஉம்' என்பது திறவோர்* 10

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (* துறவோர் - புறத்திரட்டிலுள்ள பாடம்)

எவ் வூராயினும் அஃது எம் ஊரே யாவராயினும் அவர் எம் உறவினரே! தீதும் நன்றும், நோதலும் தணிதலும் பிறரால் வருவதன்று நம்மாலேயே விளைவதாம். சாதலோ இவ்வுலகிலே புதிய செய்தியன்று. வாழ்தலே இனிது என மகிழ்தலும், வெறுத்து அதனை இன்னாதென ஒதுக்குதலும் இல்லோம். பேரியாற்று நீரிலே செல்லும் மிதவைபோல் எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரைசேரும் என்பதனைத் துறவுடையோர் காட்சியினால் தெளிந்தோம். எனவே, செல்வத்தாற் பெரியவரை மதித்தலும் செய்யோம்; சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம்.

193. ஒக்கல் வாழ்க்கை!

பாடியவர்: ஒரேருழவர். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. -

(ஒக்கல் வாழ்க்கையின் அமைதியை விளக்கி உரைக்கும் செய்யுள் இது)

\