பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

புறநானூறு - மூலமும் உரையும்


படுக்குவள் அறனில் ஆயே’ என்று கூறும் இவர், அக்காலச் சோழரது பெருநிதி வளத்தையும் உரைக்கின்றார். நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, பழையன், கணையன், பெரும்பூட் சென்னி, பொறையன், வடுகர், கொங்கர், மழவர், பெரும்பெயர் வழுதி, எவ்வி என்னும் பலரையும் பற்றிய குறிப்புக்களை இவர் செய்யுட்களுட் காணலாம். வாகை நெற்றுக் கோடைக் காற்றால் அசைப்புண்டு ஒலிப்பதற்கு, 'அரியார் சிலம்பின் அரிசியின் ஆர்ப்பை உவமித்தவர் இவர் (குறுந், 369), நெய்தல் கண்போலப் பூத்துக் கிடக்கும் (நற். 27) என்றும் கூறுவர். இவ்வாறு உவமை நயமும், பொருட்சிறப்பும், வரலாற்றுச் செய்திகளும் கொண்டு விளங்கும் செவ்விய செய்யுட்களைச் செய்தவர் இவராவர். விரிவாக ஆராய வேண்டிய சிறப்பினை உடையன இவரது செய்யுட்கள். - குட்டுவன் கீரனார் 240

குட்ட நாட்டினர் இவர்; சங்க்றுக்கும் தொழிலைக் கொண்டோரான கீரர் குடியினர். வேணாட்டு வேள் ஆய் அண்டிரனைக் குறித்த கையறுநிலைச் செய்யுள் இது. இவன்' இறந்ததனால், ‘புலவர்கள் புல்லெனும் கண்ணராகிப், புரவலர்க் காணாது, தம் கல்லென்னும் சுற்றமொடு கையழிந்து, வாடிய பசியினராகிப், பிறர் நாடுபடு செலவினர் ஆயினர் என்கின்றார் இவர். இதனால் ஆய் வள்ளலைச் சார்ந்து வாழ்ந்து வந்தாரான புலவர்களது பெருக்கமும் நன்கு அறியப்படும்.

குண்டுகட் பாலியாதனார் 387

சினையாலும் இடத்தாலும் வந்த பெயர் இது என்பர். சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதனைப் போற்றிப் பாடுகின்றார் இவர். அவனது வள்ளன்மைச் செவ்வியைச் செய்யுள் மிகவும் நன்கு விளக்குகின்றது. அவனை, மறமேம்பாடு உடையோன் எனவும், 'கொடை மடம் உடையோன்' எனவும் மிகத் தெளிவாக ஒவியப்படுத்துகின்றார் இவர். இவரது மற்றொரு செய்யுள் நற்றிணை 220 ஆம் செய்யுள் ஆகும் ‘என் சிறுமையின் இழித்து நோக்கான், தன் பெருமையின் தகவு நோக்கி வழங்கியோன், எனச் சேரமானது பண்பைப் பாராட்டுகின்றார் இவர். கபிலரால் பாடப்பெற்ற சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனும் இவனும் ஒருவனே என்றும் கருதலாம். குளம்பாதாயனார் 253

அரசனால் தரப்பட்ட இறையிலி நிலத்துக்கு உரிமை கொண்டவராதலினான் இப் பெயரைப் பெற்றனர் போலும்.