பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

427


‘மணிச்சிறைத் தும்பி! நன்மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேரியாயின், எனத் தும்பிவிடு தூதினை நயமாகப் பாடியதனால் இப் பெயர் பெற்றவர் எனலாம். நற்றிணைச் செய்யுளுள்ளும் (277) தும்பி.அருஞ்சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய் என மீளவும் இவர் பாடியுள்ளனர். ‘காதலியின் ஏக்கம் மிகுதியாகின்றது. அவனைத் தழுவப் பெறேமாயினும், கேண்மை செய்தாவது இன்புறுவோம், என அவனது குறையை மறந்து பழகுகின்றாள். இதற்கு, தச்சன் செய்த சிறுமா வையம், ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும், கையின் ஈர்த்து இன்புறு உம் இளையோர் போல’ என இவர் உவமங் காட்டுவது இனிமைச் செறிவு கொண்டதாகும். மலையருவிக்குக் கடலிடையே நின்றும் எழுகின்ற மதியத்தை உவமித்தவர் இவர் (குறு. 315). 'நன்மொழிக்கு அச்சமில்லை என்னும் வாக்கு அறச் செறிவு கொண்டதாகும் (குறுந் 392) கேடகம் தாங்கிய படைவீரர் வரிசையாகச் செல்லுவது போல மலைப்பகுதியிலே தேனடைகள் விளங்கும் என்கின்றார் இவர் (குறு.392). கணவனை இழந்த மனைவி, தன் கணவனை நினைந்து, பிண்டம் வைக்க இடத்தை மெழுகுகின்ற காட்சியை, அழுதலானாக் கண்ணள் மெழுகும் ஆப்பி கண்கலுழ் நீரானே' என்று உருக்கமுடன் கூறுவார் இவர் (புறம் 249).இவ்வாறு இயற்கையை நயந்தோன்ற எடுத்துக் காட்டிக் கருத்துக்களைச் சுவையுடன் சொல்லும் திறனாளர் இவராவர்.

துறையூர் ஓடை கிழார் 136

இவர் வேளாண் குடியினர்; துறையூரினர்; இது கொற்கைத் துறை போலும். இவராற் பாடப்பெற்றோன் வேள் ஆய் என்பான் ஆவான். ஆகவே அவன் ஆதரவைப் பெற்று, மொசியார் போன்ற பெரும் புலவருடன் கூடியிருந்து தமிழாய்ந்து சிறந்தவர் இவர் எனலாம். இச் செய்யுள், வறுமையால் இவரும் இவரைச் சார்ந்தோரும் கொண்டிருந்த அவல நிலையைக் காட்டுகின்றது. அது தீர்த்தவன் ஆய்வேள் என்பதும் அறியப்படும். அவனை வாழ்த்துபவர், “தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை நுண்பல் மணலினும் ஏத்தி உண்குவம், பெரும, நீநல்கிய வளனே என்று தம்

ஊரையும் குறித்துள்ளனர். தொடித்தலை விழுத்தண்டினார் 243

'தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று விளங்கிய தெனத் தம் முதுமைப் பருவத்தை எடுத்துக் கூறிய நயம் பற்றி இப் பெயர் பெற்றனர். முதுமையில், இளமைக்கால நினைவுகளால் திளைக்கும் மனிதவியல்பை இச் செய்யுள் நன்கு காட்டுகின்றது. அக்காலத்து இளமைப் பருவத்து ஆண் மக்களது களியாட்டுக் களிற் சில்வற்றையும் இச் செய்யுளால் அறியலாம்.