பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440

புறநானூறு - மூலமும் உரையும்


இப் பெயரைப் பெற்றனர் போலும்; அல்லது பொய்கை போன்ற நிறைந்த அடங்கிய அறிவினராதலின் இப் பெயரைப் பெற்றனர் எனவும் கருதலாம்.

பொருந்தில் இளங்கீரனார் 83 -

அகநானூற்றுள் பாலைத்திணைச் செய்யுட்களாக விளங்குவன இரண்டும் (19,351) இவரது புலமைச் செறிவைக் காட்டுவனவாகும். இளங்கீரன் இவர் பெயர்; பொருந்தில் இவரது ஊர். பெயர், கீரர் குடியினராதலின் ஏற்பட்டது. பிரிந்துறையும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியதாக வரும் அகச் செய்யுட்கள், தலைவரின் உளப்பாங்கை நன்றாகப் புலப்படுத்துவன. 'அழல் அகைந்தன்ன அங்குழைப் பொதும்பில்’ எனக்கூறிய (அகம் 315) நயம் பற்றிப் பொதும்பில் இளங்கீரனார்’ எனப் பெற்றனர் என்பாரும் உளர். சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பாடிய இச் செய்யுளில், கபிலரது சிறப்பையும் இவர் போற்றிப் புகழ்கின்றனர். அவர் காலத்துக்குப் பின்னரும் இருந்தவர் இவரென்பது இச் செய்யுளால் விளங்கும். பொன்முடியார் 299, 310, 312

இவர், சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையின் காலத்தவர். தகடூர் யாத்திரை என்னும் நூலிலும் இவர் செய்தனவாகச் சில செய்யுட்களைக் காணலாம். குதிரை மறத்தை விளக்கும் இவரது செய்யுள் மிக்க செறிவு உடையது ஆகும். (புறம்:299), ‘ஈன்று புறந்தருதல்’ என்னும் செய்யுள், அக் காலத் தமிழர் சமுதாயத்தின் கடமை உணர்வைக் காட்டுவதாகும்.

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் 388

மதுரையைச் சார்ந்த அளக்கர் ஞாழலாரின் மகனார் இவர்; மள்ளனார் இவர் பெயர், மறவர் குடியினர். அகநானூற்றுள் 5, குறுந்தொகையுள் 2, நற்றிணையுள் 3 செய்யுட்களும் செய்தவர். இவருடைய செய்யுட்கள் உவமைநயம் மிக்கனவாகும். கொல்லிமலை சேரனுக்கு உரியதென்பது இவராற் கூறப்படும். சிறுகுடிகிழான் பண்ணனின் சிறப்பை இச்செய்யுள் காட்டுகின்றது (புறம், 388). 'விசும்பின் ஏறெழுந்து முழங்கினும், மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறைப், போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை, கூர்வாட் குவிமுகம் சிதைய நூறி மானடிமருங்கிற் பெயர்த்த குருதி, வானமீனின் வயின் வயின் இயம்ப (அகம் 144) என மள்ளரின் போராண்மையை நயமுடன் உரைத்ததனால் இப் பெயர் பெற்றனராதலும் பொருந்தும்.