பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

புறநானூறு - மூலமும் உரையும்



ஒல்லையூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் - 242, 243

இவன் ஒல்லையூர் வேளாண்குடியிற் பிறந்து, சிறந்த மற மாண்பினனாகவும், கொடையாளியாகவும் திகழ்ந்தவன். குடவாயிற் கீரத்தனார், தொடித்தலை விழுத்தண்டினார் முதலியோர் இவனைப் பாடியுள்ளனர். இவன் கங்கன், கட்டி போன்றோர் காலத்தவன். 'ஒல்லையூர்’ என்றது, ஒலிய மங்கலத்தினை; இது கோனாட்டிலுள்ளது. வல்வேற் சாத்தன்' மாய்ந்த பின்றை, முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே?” என்று கேட்டு வருந்துகின்றார் புலவர் குடவாயிற் கீரத்தனார் (242).

ஓய்மான் நல்லியக் கோடன் - 176, 376

இவன் ஒய்மானாட்டை ஆண்டுவந்த ஒரு குறுநிலத் தலைவன். கடையேழு வள்ளல்களின் காலத்திற்குப் பிற்பட்டுப் பெருங் கொடையாளியாக விளங்கியவன் இவன். ஒய்மான் வில்லியாதன், ஒய்மான் நல்லியாதன் என்போர் இவன் குலத்து முன்னோராக விளங்கினர். இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் நன்னாகனாரும் இவனைப் பாடிய புலவர்களாவர். எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், கிடங்கில் என்னும் ஊர்கள் இவனுக்கு உரியனவாயிருந்தன. இடைக் கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுப் படைக்குரிய பாட்டுடைத் தலைவன் இவனே. இவனுடைய சிறப்புக்களை அதனுட் கண்டு போற்றுக -

ஓய்மான் வில்லியாதன் - 379

இவன் மாவிலங்கையின் தலைவனாக விளங்கியவன்; ஒய்மான்களின் மரபிலே தோன்றியவன். இவனைப் பாடியவர் புறத்திணை நன்னாகனார் ஆவர். புன்னாட்டுக்கு வடக்கிலுள்ள அருவா நாடும் அருவா வடதலை நாடும் ஆகிய பகுதியே மாவிலங்கை எனவும், அதன் தலைவன் இவன் எனவும் உரைப்பர். 'குறும்படு குண்டகழ் நீண் மதில் ஊர்'இவனது கோநகர் என்று கூறப்படுகின்றது. கரும்பனூர் கிழான் காலத்தவன் இவன் என்பதும் அறியப்படும்.

கடிய நெடு வேட்டுவன் - 205

இவன் வேடர்கள் தலைவனாகவும், தமிழின்பம் துய்க்கும் ஆர்வத்தினனாகவும், பெருங் கொடையாளியாகவும் விளங்கியவன். பகைவர்களை அழிக்கும் பெருவல்லமையும் உடையவன். கோடை என்னும் மலைக்குத் தலைவன் என்பதனை, 'வெள்வி வேலிக் கோடைப் பொருந’ என வருவதனால் அறியலாம். இவனைப் பாடியவர் பெருந்தலைச் சாத்தனார். அவர் குமணன், இளவிச்சிக்கோ, மூவன் முதலியோரைப் பாடியவர்.