பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

புறநானூறு - மூலமும் உரையும்


நாணியவனாக, வடக்கிருந்து உயிர் நீத்தனன் (புறம்.65 66), 'பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற, ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பீடில் மன்னர் என, இவனோடு வாகைப் பறந்தலையிற் போரிட்டுத் தோற்றாரைப் பற்றிப் பரணர் கூறுவர் (அகம் 125). இவன் மகள் ஆதிமந்தி என்றும் கூறப்படும்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் - 58, 60, 197, 373

- இவன் பெயர் பெருந்திருமாவளவன்' எனவும் வழங்கும்.

இவனைப் பாடியோர் உறையூர் மருத்துவன் தாமோதரனார். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், கோவூர்கிழார், கோனாட்டு எரிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஆகியோர் ஆவர். இவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியோடு நட்புக் கொண்டு வாழ்ந்தவன். கொடையாலும் போர்மறத்தாலும் சிறப்புற்று விளங்கியவன். இவன் கருவூர்ச் சேரனை அழித்து வெற்றி கொண்ட செய்தியைக் கோவூர் கிழார் கூறுகின்றனர் (373), -

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் - 34 - 41, 42, 69, 70, 173, 226 – 228, 386, 393, 397

இவன் படையாண்மை, கொடையாண்மை, சொல்லாண்மை ஆகிய மூன்றானும் சிறப்புற்று விளங்கியவன். இவனைப் பாடியோர் ஆடுதுறை மாசாத்தனார், ஆலத்துர்கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக் காடனார், ஐயூர் முடவனார், கோவூர் கிழார், தாயங் கண்ணனார், நல்லிறையனார், மாறோக்கத்து நப் பசலையார், வெள்ளைக்குடி நாகனார் முதலியோராவர். வெள்ளைக்குடி நாகனார் பாடிய செய்யுள் (புறம் 35) அரசாள்வோரின் கடமைகளை நன்றாக எடுத்துக் கூறுவதாகும். 'குடிபுறம் தருகுவை யாயின், நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே என்று கூறும் அறிவுரை மிகச் சால்புடையது . ஆகும். இவன் கருவூரை முற்றி வெற்றி கொண்டவன். 'செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை உடையவன் இவன் (38). வஞ்சியையும் இவன் வென்று புகழ் பெற்றவன் (39). இவன் நெல்வளத்தையும் பெருக்கியவன்; 'ஒரு பிடிபடியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு கிழவோன் இவன் ஆவன் (40), சிறுகுடி கிழான் பண்ணனைப் பாடிய இவனது செய்யுள் இவனது புலமைச் சிறப்பைக் காட்டும் (173). இவன் இறந்த பின்னர் இரங்கிப் பாடிய செய்யுட்கள் (266, 267, 228) இவனது சீர்சால் புகழைக் காட்டுவனவாகும்.