பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

புறநானூறு - மூலமும் உரையும்


வாட்டாற்று எழினியாதன் - 396

வாட்டாற்றுத் தலைவன் இவன், மாங்குடி கிழார் இவனைப் பாடியுள்ளனர்.

விச்சிக்கோன் - 200

இவன் சிற்றரசருள் ஒருவன்; வேளிர் குடியினன். கபிலர் பாரிமகளிரை மணஞ்செய்து கொள்ளுமாறு வேண்டவும் மறுத்து, அவரால் மனம் நொந்து பாடப் பெற்றவன். குடக்கோச் சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டு முடிந்தவன்.

வெளிமான் - 162, 237 - 8

இவன் கொடையாண்மையிற் சிறந்தவன். இவன் காலத்தவராக இருந்து, இவன் இறந்த பின்னரும் இவன் பிரிவுக்கு வருந்திப் பாடிய புலவர் பெருஞ்சித்திரனார் ஆவர்.

வேங்கை மார்பன் - 21

இவன் கானப் பேரெயிலின் தலைவனாக விளங்கியவன்; உக்கிரப் பெருவழுதியால் வெல்லப் பட்டவன். இவனைப் பாடியவர் ஐயூர் மூலங்கிழார் ஆவர்.

வேள் எவ்வி - 24, 202, 233 - 4

இவன் மிழலைக் கூற்றத்தின் தலைவன். மிக்க கொடையாளனாகவும், மற மாண்பினனாகவும் திகழ்ந்தவன். "எவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர், பூவில் வறுந்தலை போல (குறு.19) என இவனது கொடைச் சிறப்பைப் போற்றியுள்ளனர். மாங்குடி கிழார், கபிலர், வெள்ளெருக்கிலையார் முதலியோராற் போற்றிப் பாடப்பெற்றவன் இவன் தலையாலங்கானத்து நெடுஞ் செழியனால் வெற்றி கொள்ளப்பட்டவருள் இவனும் ஒருவன்.