பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

53


நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது,

பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக் .

குடிபுறம் தருகுவையாயின், நின்

அடிபுறந் தருகுவர், அடங்கா தோரே.

தண் தமிழுக்கு உரிமையுடையவராகக் கடல் சூழ வானங் கவிய விளங்கும் இத் தமிழ்நிலத்தை, முரசு முழங்குந் தானைகளோடு, வென்றியுடன் ஆள்பவர் மூவேந்தர். அவருள்ளும் 'அரசு’ எனச் சிறப்பிக்கப்படுவது நின் அரசே பெருமானே! நாற்புறத் திசையினும் கதிரவன் தோன்றினாலும், வெள்ளி தென்திசைச் சென்றாலும், காவிரி வாய்க்கால்கள் வழியாகச் சென்று ஊட்டத், தொகுதி கொண்ட வேலின் தோற்றம் போலக் கரும்பின் வெண்மையான பூக்கள் அசைந்தாடும் நின் வளநாடு ஒன்றே, நாடு’ எனச் சிறப்பித்துக் கூறத் தக்கதாகும். அத்தகைய நாடுதரும் செல்வத்தால் பெருமை நிரம்பிய வேந்தே நினக்குச் சில சொல் வேன்! கேட்பாயாக -

அறமே நிலவும் செங்கோல் ஆராய்ச்சியிலே, ஒருவர் நீதி வேண்டும்போது அவர்க்கு எளிதிலே காட்சியுடையவனாதல், மழைத்துளியை வேண்டும்பொழுது பெருமழையே பெய்வது போலும் தகவுடையதாகும். ஞாயிற்றைச் சுமந்து திரிவன போல முகில்கள் விளங்கும் வானத்து நடுவே, ஒங்கி விளங்கும் நின் வெண்கொற்றக் குடை, வெயிலை மறைக்கக் கொண்டதன்று; கூரிய வேலேந்தும் வளவனே, அது குடிகளின் வருத்தத்தினைப் போக்கி அருள் செய்வதன் அடையாளமாகும். முற்றாத பனையின் துண்டங்களைப் போலத் தம் உடலுறுப்புக்கள் ஆங்காங்கே கிடக்குமாறு, பகைவரின் யானைத் தொகுதிகள் தம்முடன் பொருத காலத்திலே, அகன்ற அப் போர் முனையிலே, நின் படைவீரர் அவற்றை வென்று நினக்குத் தேடித்தந்த வெற்றியும், கொழுமுனை கிழித்த விளைவயலின் சாலிடத்தே விளைந்த நெல்லின் பயனால்தான் வாய்ப்பதாயிற்று என்பதை மறவாதே. மழை இல்லையானாலும், விளைவு குறைந்தாலும், இவ்வாறு இயற்கை யல்லாத தீங்குகள் செயற்கையால் தோன்றினாலும். உலகம் காவலரையே பழிக்கும். அதனை நன்கு நீ அறிந்தவன் என்றால், ஒன்று கேள் : மாறுபட்டோரின் பொது மொழியை மனத்திற் கொள்ளாதே. உழவர் குடியினரை முதற்கண் பாதுகாத்து, அதனால் ஏனைக் குடியினரையும் பசியின்றி நீ காப்பாயானால், நின் ஆணைக்கு அடங்காதவர்கூட நின் அடியிணைகளைப் பணிந்து, நின்னைப் போற்றுவர்!