பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

109

கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப்பேசியவர்கள் ஆவார்கள்.

அவர்களை வேரோடு அழிந்து சிதைந்துபோகும்படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப்பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்தவில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப்படுவேனாக! மிக்கசிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடிமருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடாதொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லையென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...”

இந்தச் சபதத்தைக்கூறி முடித்தவுடன் யார் கூறியும் கேட்காமல் உடனே படைகளோடு போருக்குப் புறப்பட்டு விட்டான் நெடுஞ்செழியன். போரின் முடிவு என்ன ஆகுமோ என்று அனுபவமும் முதுமையும் வாய்ந்த அமைச்சர்களெல்லாம் கவலை கொண்டிருந்தனர்.

மாந்தரஞ் சேரல் இரும்பொறை, திதியன், எழினி முதலிய பகையரசர் படைகளும் நெடுஞ்செழியன் தலைமையில் சென்ற பாண்டிய நாட்டுப் படைகளும் ‘தலையாலங்கானம்’ என்ற இடத்தில் ஒன்னையொன்று எதிர்த்துக் கைகலந்தன. எங்கும் படர்ந்து வளர்ந்திருந்த பெரிய பெரிய ஆலமரங்கள் நிறைந்திருந்த அந்தக் காடு போருக்கு வசதியான இடமில்லையானாலும் போர் என்னவோஅங்கே நடந்தது.

போரின் முடிவு என்ன ஆயிற்று தெரியுமா? அந்தப் போரில் இளைஞனான நெடுஞ்செழியனால் வெல்ல முடியும் என்று கனவில்கூட யாரும் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. ஆனால் வென்றது என்னவோ அவனேதான்! வென்றது மட்டுமா?