பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


இல்லை. அந்த மான்கள் துணுக்குற்றுப் பிரிந்துவிடக்கூடாது. ஆழ்ந்து உறங்கும் தன் கணவனின் உறக்கம் கலைந்துவிடக்கூடாது. அவ்வளவு போதும் அவளுக்கு.

பேசாமல் உள்ளே மெல்ல நடந்து சென்றாள் அந்த வேட்டுவச்சி, மான் தோலை விரித்து அதன்மேல் உலர்த்தியிருந்த தினையைக் கோழிகளும் இதல்களும் சிறிது சிறிதாக உண்டு தீர்த்துக் கொண்டிருந்தன.

வேடனின் உறக்கமும், மான்களின் இன்பமும், கோழி முதலிய பறவைகளின் வயிறும் நிறைந்து கொண்டிருந்தன. மான் தோலில் உலர்த்தியிருந்த தினைமட்டும் குறைந்து கொண்டே இருந்தது.

மறுபடியும் அவள் வெளியே வந்தபோது கணவன். உறங்கி எழுந்திருந்தான். மான்கள் ‘பழைய நிலை’யிலிருந்து பிரிந்து தனித்தனியே மேய்ந்து கொண்டிருந்தன. தினை உவர்த்தியிருந்த மான் தோலைப் பார்த்தாள்.அதில் ஒன்றுமே இல்லை.ஆனாலும் அவள் மனம் என்னவோ நிறைந்திருந்தது.

முன்றில் முஞ்ஞையொடு முசுண்டைபம்பிப்
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயின் மடிந்தெனப்
பார்வை மடப்பினை தழிஇப் பிறிதேர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்து விளையாட
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
இல்வழங்காமையிற் கல்லென ஒலித்து
மானதள் பெய்த உணங்குதினை வல்சி
கானக் கோழியோடிதல்கவர்ந் துண்டென! (புறநானூறு-320)

முன்றில் = வீட்டு வாயிலின் முன், முசுண்டை = ஒரு கொடி, பம்பி = படர்ந்து கைம்மான் = யானை, துயில் = தூக்கம், பிணை =